முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸவிற்கு அறுவை சிகிச்சை நடாத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் அனில் சில்வா, நீதிமன்றத்தில் இன்று அறிவித்திருந்தார்.
சிறை வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஸ மீதான வழக்கு விசாரணைகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னலையில் இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன.
‘சிரிலிய சவிய” திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, அதன் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஷிராந்தி ராஜபக்ஸ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஸவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், சிறை வைக்கப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்ஸவிற்கு நேற்றைய தினம் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதன்பிரகாரம், சிறைச்சாலை திணைக்கள மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி, ஷிராந்தி ராஜபக்ஸ, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், ஷிராந்திர ராஜபக்ஸவிற்கு அறுவை சிகிச்சை நடாத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சந்தேகநபராக ஷிராந்தி ராஜபக்ஸ நேற்றைய தினம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தாம் அறிவதாகவும், ஆனால், அறுவை சிகிச்சை நடாத்தப்பட்டமை தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிஷ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், வழக்கு விசாரணைகள் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட பின்னணியில், ஷிராந்திர ராஜபக்ஸ மீண்டும் 16ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவும் மருத்துவமனையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று காலை திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, மஹிந்த ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்;.
இந்த நிலையிலேயே, அவரது மனைவியும் திடீர் சுகயீமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகன் நாமல் ராஜபக்ஸ தொடர்ந்தும் சிறையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் 27ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஸ, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.