தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கவுதம், தனது அறிமுகப் படமான “மெம்பர்ஸ் ஆஃப் தி பிராப்ளமடிக் பேமிலி”திரைப்படத்திற்காக, 2026-ம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ஸ்கிரீன் விருதை வென்றுள்ளார். இந்த விருதுகள் ‘ஆசியாவின் ஆஸ்கார்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
கவுதமின் முதல் திரைப்படமான இந்தப் படத்தின் கதை, ஒரு குடும்பத்தில் ஏற்படும் இழப்பு, துக்கம் மற்றும் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் 2026 பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘திரைப்பட மன்றம்’ என்ற பிரிவில் திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2026 இந்திய மெல்போர்ன் திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாகவும் இப்படம் தேர்வு செய்யப்பட்டது.
துயரத்துக்குள் சிக்கிய குடும்பத்தின் கதை:
மது பழக்கத்துக்கு அடிமையான மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளுக்காக ஒன்றுகூடுகின்றனர். அந்த சந்திப்பின்போது, குடும்பத்தினருக்குள் நீண்ட காலமாக மறைந்து கிடந்த பழைய நினைவுகள், மனக்கசப்புகள் மற்றும் தீர்க்கப்படாத உணர்வுகள் மீண்டும் வெளிப்படுகின்றன.
ஒருவரின் மரணத்தை மட்டுமே மையமாகக் கொள்ளாமல், அந்த இழப்பை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் திரைப்படம் பதிவு செய்கிறது. துக்கத்துக்கு நடுவிலும் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக இணைக்கும் உறவுகளின் தன்மையையும் படம் எடுத்துக்காட்டுகிறது.
கவுதமின் திரையுலகப் பயணம்:
திரைப்பட இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பு தமிழ்க் கவிதை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆவணப்படத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர். கவுதம் பணியாற்றியுள்ளார்.அவர் இயக்கிய ‘ஆண்டியின் தடங்களில்’ என்ற ஆவணப்படம் 2023-ம் ஆண்டு நடைபெற்ற வான்கூவர் ஆசிய திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டது.
“மெம்பர்ஸ் ஆப் தி பிராப்ளமடிக் பேமிலி” திரைப்படத்தில் கருத்தடையான், ஏ.ஆர். அஜித் குமார், உவேஸ்ரி, காஞ்சனா செந்தில், சரவணா சித்தார்த், டி.பி.எஸ்., அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல் திரைப்படமே சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கிடைத்துள்ள இளம் திரைப்பட விருது, ஆர். கவுதமின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சர்வதேச அங்கீகாரமாக அமைந்துள்ளது.