அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்தாகிய பௌத்த தேரரின் காவி உடை அகற்றப்பட்டு கைதி உடை வழங்கியமையில் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை பெற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் வெள்ளைநிற ஆடை வழங்கப்பட்டமை தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு காவி உடை அணிவதற்கான உரிமை தொடர்பில் கோட்டே பௌத்த சபையினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருந்த தருணத்தில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவினால், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி அவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழங்கப்பட்டது.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என தீர்மானித்த உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை வலுவிழக்கும் தீர்ப்பை வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும், பொதுமன்னிப்பு வலுவிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ம் தேதி திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.

அதேவேளை, கொழும்பு மேல்நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் விசாரிக்கப்படும் வழக்கில் தேரர் முன்னிலையாகாததை அடுத்து, அந்தந்த நீதிமன்றங்களினாலும் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியிருந்த பின்னணியில், போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், களுத்துறை – தீனியாகல பகுதியிலுள்ள வனாந்தரமொன்றிலுள்ள விகாரையொன்றில் வைத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத் தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை நடைமுறைப்படுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு நேற்றைய தினமே அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

காவி உடையின்றி, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்

காவி உடையின்றி, சிறை கைதிகளின் ஆடையில் அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.

இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர் இன்று அழைத்து வரப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் அழைத்து செல்லப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, காவி உடை சிறைச்சாலை அதிகாரிகளினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிற ஆடை வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்களை மேற்கோள்காட்டி நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே, அவர் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன்போது, காவி உடைக்கு பதிலாக சிறை கைதிகளின் ஆடை அணிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த பீடங்களுக்கிடையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பௌத்த பீடம் அனுப்பிய அவசர கடிதம்.

கலகொடஅத்தே ஞானசார தேரரின் ஒழுக்கமின்மை மற்றும் அவரின் காவி ஆடையை அப்புறப்படுத்தும் அளவிற்கான எந்தவொரு பாரிய காரணங்களும் தமது பீடத்திற்கு பதிவாகவில்லை என கோட்டே பௌத்த பீடம், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பீடம் என்ற விதத்தில் ஒழுக்காற்று விசாரணைகள் நடாத்தப்பட்டு, காவி உடையை அப்புறப்படுத்துதல் அல்லது காவி உடையை அணிவதற்கு அனுமதி வழங்குதல் ஆகியன தமது பீடத்திற்கான பொறுப்பு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அப்புறப்படுத்தாது, அவரை காவி உடையிலேயே இருப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh