முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது மனைவி சிறைச்சாலையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மருத்துவமனையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு, சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வெளியான செய்தி போலியானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவரது வயது முப்பு நிலைமையை கருத்திற் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பகிர்ப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவரது ஊடகப் பேச்சாளர், அவ்வாறான அனைத்து தகவல்களும் போலியானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் மனைவியும் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி, ஷிராந்தி ராஜபக்ஸவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவிக்கின்றது.
விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய ஷிராந்தி ராஜபக்ஸ கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக சிறைச்சாலை பேச்சாளரும், ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவிக்கின்றார்.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஸவிற்கு, இதய நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணரினால் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர் மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய கொழும்பு தேசிய மருத்துவமனையின் 61 ஆவது அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
சிரிலிய சவிய அமைப்பிற்கு சொந்தமான பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ கடந்த 5ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்படி, ஷிராந்தி ராஜபக்ஸ எதிர்வரும் 13ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்ஸ இன்று மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ தொடர்ந்தும் சிறையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.