சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின், தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சௌதி அரேபிய விசேட சட்ட வல்லுநர்களின் ஒன்றிணைந்த முயற்சியில் இந்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்காக இலங்கை சட்ட வல்லுநர்கள் மற்றும் சௌதி அரேபியா சட்ட வல்லுநர்கள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர்.
சௌதி அரேபியாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வாட்டின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அனோஜனை மரண தண்டனையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை சட்ட வல்லுநர்கள் குழுவொன்று கடந்த வாரம் சௌதி அரேபியா நோக்கி பயணித்திருந்தது.
இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் அசாத் சவாவி, ஜனாதிபதி வழக்கறிஞர்களான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்த குழுவில் இடம்பிடித்திருந்தனர்.

நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சௌதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் பதிவொன்றை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை அடுத்து, சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜன், அந்த நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்படி, 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
எனினும், இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, இலங்கை சார்பாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட அதேவேளை, அந்த நாட்டு அரச தரப்பினாலும் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகளின் போது சிவராசா அனோஜனுக்கு கடந்த மாதம் 17ம் தேதி அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, 30 நாட்களுக்குள் மேன்முறையீட்டு மனு சௌதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய கட்டாயம் காணப்பட்ட பின்னணியில், நேற்றைய தினம் அந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தியை படிக்க :- சிறைத் தண்டனை வழங்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனுக்கு, மரண தண்டனை விதித்த சௌதி நீதிமன்றம்