டீ கடை முதல் ஹோட்டல்கள் வரை அனைத்துப் பொது இடங்களிலும் செய்தித்தாள்கள் கட்டாயம் இருக்கும். வேலைப் பளுவால் அவசர அவசரமாக தலைப்புச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு பின்னர் அதை உணவுப்பொருட்களைப் பொட்டலம் போடுவதற்குப் பயன்படுத்துவார்கள். சூடாக மற்றும் எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாள்களில் மடித்துக் கொடுக்கும் போது அதில் உள்ள கெமிக்கல் நிறைந்த மைகளால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என ஒவ்வொரு முறையும் எச்சரிக்கிறது. ஆனாலும் நம்மையே அறியாமல் டீ கடைகளுக்குச் சென்றால் கிழித்து வைத்திருக்கும் சிறிய நியூஸ் பேப்பரை எடுத்து எண்ணெய்யைப் பிழித்து எடுப்போம்.
பின்னர் தான் அதை ருசித்து சாப்பிடுவோம். ஆனால் இது முற்றிலும் தவறான செயல் என்றும், இவ்வாறு செய்யும் போது உடலுக்குப் பல வழிகளில் பாதிப்பு ஏற்படும். எனவே அனைத்துக் கடைகளிலும் இனி செய்தித்தாள்களைப் பயன்படுத்தக்கூடாது என உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறைச் சட்டம் 2018-ன் படி உணவுகளைச் சேமிக்கவோ, பார்சல் செய்யவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை எந்த கடைகளிலும் இதை முறையாக பின்பற்றவில்லை. எப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பார்க்கிறார்களோ? அப்போது மட்டும் கடைகள் அனைத்தும் அலார்ட் ஆகிவிடும். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ஒரு கடையில் செய்தித்தாள்களைப் பயன்படுத்தியால் அதிரடி நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்தத் தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு முன்னதாக இந்த உத்தரவு துரிதமாக்கப்பட்டாலும் இன்னமும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலானக் கடைகளில் சூடான வடைகளை ருசித்து சாப்பிட செய்தித்தாள்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் கடை உரிமையாளர்கள் தரமான பட்டர் பேப்பர் அல்லது அரசின் அங்கீகரிக்கப்பட்ட உணவுத் தர பேப்பர்கள் அல்லது வாழை இலைகளைப் பயன்படுத்த வேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களும் செய்தித்தாள்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்தித்தாள்கள் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு?
செய்தித்தாள்களில் வைத்து சூடாக வடை மற்றும் பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடும் போது இதில் உள்ள அச்சு மையில், ஈயம், கிராபைட் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் மற்றும் பினாயில் போன்ற ஆபத்தான கன உலோகங்கள் உள்ளன. எனவே அதிக சூடாக உணவு சாப்பிடும் போது பேப்பரில் உள்ள அச்சு மை வேகமாக உணவுப்பொருட்களோடு கலந்துவிடுகிறது. இது செய்தித்தாள்களில் மட்டுமல்ல பழைய பேப்பர்கள் மற்றும் புத்தகங்களிலும் உணவுப்பொருட்களைப் பொட்டலமிடுவதும் சட்டப்படி குற்றம்.
ஒருவேளை தொடர்ச்சியாக இதை பயன்படுத்தும் போது செரிமானக் கோளாறுகள் மற்றும் கடுமையான வயிற்றுப்பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுவதோடு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.