பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா (84) வயதுமூப்பு காரணமாக சென்னையில் இன்று (10/06/2026) காலமானார்.
முன்பு திரைப்படங்கள் பெரும்பாலும் அரங்குக்குள்ளேயே எடுக்கப்பட்டு வந்த காலக்கட்டத்தில், மண் மணம் மாறாத கிராமங்களை திரைக்கு கொண்டுவந்த முன்னோடி இயக்குனர் இமயம் பாரதிராஜா.
1941ல் மதுரை மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த பாரதிராஜா, ஆரம்பத்தில் புகழ்வாய்ந்த கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலுக்கு உதவி இயக்குனராக இருந்தார்.
1977ல் 16 வயதினிலே படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர், கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்கினார்.
பாரதிராஜாவுக்கு கிராமப் படங்கள் மட்டுமே இயக்கத் தெரியும் என்று பரவலாக பேசப்பட்டு வந்ததால், அந்த பிம்பத்தை மாற்ற சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை இயக்கினார்.

அதைத்தொடர்ந்து, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, நாடோடி தென்றல், கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே உட்பட பல தரமான திரைப்படங்களை இயக்கினார்.
என் இனிய தமிழ் மக்களே என்ற அவரது கம்பீர குரலுடன் வரும் டைட்டில் கார்டுக்கே அன்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது.
தெலுங்கு படமான சீதலோக சிலக்கா, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, ஆகிய படங்களுக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
பாக்யராஜ் உள்ளிட்ட பல இயக்குனர்களுக்கு ஆசானாக இருந்து திரைத்துறையில் முகவரி ஏற்படுத்தி தந்தவர் பாரதிராஜா.
கார்த்திக், நெப்போலியன், நிழல்கள் ரவி, ஜனகராஜ், மணிவண்ணன் உட்பட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதுபோல, ஆங்கில எழுத்தான R சென்டிமென்டில், ராதா, ராதிகா, ரேகா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகளை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தனது மகன் மனோஜ் அகால மரணத்துக்கு பின் சில காலம் மனதளவில் சோர்ந்துப் போயிருந்த பாரதிராஜா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 10) காலை சென்னையில் அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.