2026, 2027ம் ஆண்டு Super El Niñoவால் இயற்கை பேரிடர்களைச் சந்திக்கபோகிறது உலக நாடுகள். வரலாறு காணாத வெப்பத்தில் தகிக்கப்போகிறது தமிழ்நாடு. உலகை நடுநடுங்க வைத்துள்ள NOAA அறிக்கை சொல்வதென்ன? ஆய்வாளர்களின் எச்சரிக்கை என்ன?
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை El Niño. ஈரோட்டில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தொட்டால் – El Niño காரணம், ஆஸ்திரேலியாவிலோ, அமேசானிலோ காட்டுத்தீ பரவினால் El Niño, கடலில் சீற்றம், வெள்ளம் என எது நடந்தாலும் நாம் கேள்விப்படும் வார்த்தை தான் El Niño. இப்போது புதியதாக உலக அளவில் பேசப்படும் சொல் தான் Super El Niño.
இவற்றிற்கான அரத்தம் என்ன? இவை வரும் 2026, 2027ம் ஆண்டில் நம் வாழ்வை எப்படிப் புரட்டிப்போடும் என்பதை இக்கட்டுரையில் படிக்கலாம் விரிவாக…
Super El Niñoவால் பாதிப்பு என்ன?
எல் நினோ என்பது பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகை ஒட்டியுள்ள பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலின் வெப்பம் அதிகரித்தால் அது ‘எல் நினோ’ – El Niño என்றும் சராசரியை விட குறைவாகச் சென்றால் அது ‘லா நினா’ – La Niña என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக எல் நினோ காலகட்டத்தில் கடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். சராசரி வெப்பத்தை விட 0.8 – 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் அது எல் நினோ, அதைவிட 1.5, 1.5 – 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் அது சூப்பர் எல்நினோ என வகைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச காலநிலை ஆய்வாளர்கள் தற்போது பசிபிக் பெருங்கடல் குறித்தான ஆய்வுகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதற்குக் காரணம் அங்கு நடந்துவரும் சூப்பர் எல் நினோ மாற்றங்கள் தான்.
சில நாட்களுக்கு முன்பாக NOAA (National Oceanic and Atmospheric Administration) எனப்படும் வட அமெரிக்க பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்திற்கான கூட்டமைப்பு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதில், கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான Super Charged El Nino உருவாகக்கூடும், இதனால் 2026 இறுதி மற்றும் 2027 துவக்கத்தில் உலக நாடுகள் கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவன அதிநவீன செயற்கைக்கோள்கள் அனுப்பிய உயர்தரத் தரவுகள் இந்த ஆபத்தான வெப்பநிலையைத் துல்லியமாகக் காட்டியுள்ளன.
ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சிக்குறியதாகவும், ஆபத்தானதாகவும் பார்க்கப்படுகிறது.
இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை…
சூப்பர் எல் நினோ உலக நாடுகள் அனைத்திற்குமான எச்சரிக்கை எனக்கூறி, குறித்து விரிவாக விளக்குகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
‘‘2026, 2027 நிச்சயமாக ஒரு சூப்பர் எல்நினோ ஆண்டுகளாக இருக்கும். கடந்த 10 எல் நினோ ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கியமான அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை Long Term Averaஐ விட மிகக்குறைவாக இருக்குமென தெரிவித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக இந்தியா பெறும் அளவை விட 8 சதவீதத்திற்குள் மேல் மழை குறையும், 92 சதவீதம் மட்டுமே மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

நாம் இதையும், சூப்பர் எல் நினோ கணிப்பையும் ஒருங்கிணைத்துப் பாக்க வேண்டும். இந்த பாதிப்பால், மழைக்குறைவு மட்டுமல்லாமல் இந்தியா இதுவரை பார்த்திராத மிக அதிகமான வெப்ப அலைகளை எதிர்கொள்ளப்போகிறது, கடும் வெப்பத்தில் தகிக்கப்போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்கிறார் அவர்.
ஏன் எல்நினோ சூப்பர் சார்ஜ் ஆக மாறுகிறது என்பதை விளக்கிய சுந்தர்ராஜன், ‘‘எல் நினோ உருவாக பல இயற்கை காரணங்கள் இருப்பதை நாம் அறிந்தது தான். இப்போது ஏன் கூடுதல் வெப்பத்தை பெறுகிறது என்ற கேள்விக்கான விடை, பெருங்கடலின் வெப்பம் மிகக்கடுமையாக அதிகரித்தது என்பது தான்.
நாம் வெளியிடக்கூடிய கார்பன் அல்லது வெப்பம் வெளியேறாமல் பூமியிலேயே இங்கேயே தங்கி விடுகிறது. இந்த வெப்பத்தை பெருங்கடல்களும், காடுகளும் வாங்கிக் கொள்கின்றன. ஒருவேளை இந்தக்காடுகளும், கடல்களும் இல்லாமல் இருந்திருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்கும்.
பெருங்கடல்கள் வாங்கிக்கொள்ளும் வெப்பத்தின் காரணமாக, Sea Surface Temperature மிக அதிகமாகி விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடலின் முதல் நான்கு கிலோ மீட்டரில், சராசரி ஆழம் (Average depth) நான்கு கிலோ மீட்டர் என வைத்துக்கொண்டால், இதில் முதல் இரண்டு கிலோ மீட்டர் முழுவதுமாக வெப்பமாகி விட்டதாக ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளில் Marine Heat Waves – பெருங்கடல் வெப்பத்தீவுகள் நிரந்தரமாக உருவாகிவிட்டதாக ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன,’’ என்கிறார்.
இயற்கை பேரிடர்கள் உருவாகும்…
சூப்பர் எல் நினோவால் பெரிய இயற்கை பேரிடர்களை நாம் எதிர்கொள்வோம் என்கிறார் சுந்தர்ராஜன்.
‘‘இந்த Sea Surface Temperature அதிகரிப்பதால் என்னவாகும்? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக எல் நினோ காலகட்டத்தில் எவ்வளவு வெப்பம் உயர்ந்ததோ, சராசரியாக எவ்வளவு வெப்பம் இருந்ததோ, அது இன்று லா நினா காலத்தில் வர ஆரம்பித்து விட்டது.
எடுத்துக்காட்டாக எல் நினோ காலத்தில் அதிக வெப்பம் 20 டிகிரி என்றால், இன்று லா நினாவின் குறைந்தபட்ச வெப்பநிலையே 20 டிகிரியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு கடலின் வெப்பம் அதிகரித்துவிட்டது. இது தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்றால் நாம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிவரும், NOAA அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது.

இது உலகம் முழுவதிலும் பெரும் இயற்கைப் பேரிடர்களை உருவாக்கும், அதீத வெப்பம், கடுமையான வறட்சி, திடீரென அதிகப்படியான மழைப்பொழிவு, புயல் இருக்குமென கவலையோடும், அச்சத்தோடும் ஆய்வுகள் நமக்கு எச்சரிக்கின்றன,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த சுந்தர்ராஜன், ‘‘இது மட்டுமல்ல பெருங்கடலில் இருக்கக்கூடிய நீரோட்டங்கள் (Ocean Streams) மற்றும் எல் நினோவிற்கு பெரும் தொடர்பு இருக்கிறது. இது உலகம் முழுவதிலும் செல்லக்கூடிய கடல் காற்று அல்லது வெப்பக்காற்று, வெப்ப அலை அல்லது மழை மேகங்கள் என எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2015 ஒரு எல் நினோ ஆண்டு, அப்போது ஆஸ்திரேலியாவில் வறட்சியால் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டு லட்சக்கணக்கான காட்டுயிர்களை அந்நாடு இழந்தது. அதே சமயத்தில், இந்தியாவில் வடகிழக்கு பருவமழைக் காலகட்டத்தில் மிகக்கடுமையான மழைப்பொழிவை தமிழகம் சந்தித்தது. இந்த பாராமீட்டர்ஸ் நமக்கு என்ன சொல்ல வருகிறதென்றால், 2026 மற்றும் 2027 இதுவரை இந்தியா கண்டிராத வெப்பத்தை நாம் சந்திப்போம் என்பதை NOAA அறிக்கை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஆகையால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளும் நமக்கு மிகவும் சவாலானதாக இருக்கும், மிகக்கடுமையான வெப்ப அலை வீசும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாடும், தமிழகமும் தயாராக வேண்டும்,’’ என எச்சரிக்கிறார் சுந்தர்ராஜன்.
இந்தாண்டு வழக்கத்தை விட கடுமையான வெப்பத்தை தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஏப்ரல், மே மாதங்களில் எதிர்கொண்டன. எடுத்துக்காட்டாக ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவைக் கடந்து வெப்பம் பதிவானது. இந்த சம்பவங்கள் எல்லாம் சூப்பர் எல் நினோவின் தாக்கங்கள் எனவும் எச்சரிக்கிறார் அவர்.
மரணத்தைக்கூட ஏற்படுத்தும் வெப்ப அலை
சூப்பர் எல்நினோ, வெப்ப அலை, வெப்பக்குடில், கடலில் வெப்பநிலை என்றெல்லாம் கேள்விப்பட்டோம், ஆனால் நேரடியாக எல் நினோ பாதிப்புகள் நம்மை எப்படித் தாக்கும்? என்றால் பலருக்கும் விடை தெரிவதில்லை. இந்த சூப்பர் எல்நினோவால் நமக்கு மரணம் கூட ஏற்படுமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக வெப்பம் உயரும் போது நம் உடலில் என்னவெல்லாம் நடக்குமென்று விளக்குகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவின் சுற்றுச்சூழல் ஆய்வாளர் தழல்.
‘‘பொதுவாக கோடை காலத்தில் நீர் குடித்தால் போதும் சரியாகிவிடும் எனச்சொல்வார்கள். ஆனால், நமக்கு அறியாமலேயே நம்மைச் சுற்றி வெப்பத்தால் பலரும் இறந்து வருகின்றனர். நம் உடலில் அகவெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்போது உடல் சாதாரணமாக செயல்படும்.

வெறும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்து 38 டிகிரியைத் தொட்டால் வியர்குரு வரும், தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். 39 டிகிரி செல்சியஸ்க்கு உயர்ந்தால் தலைவலி, திடீர் தடுமாற்றம், மயக்கம் மற்றும் தள்ளாட்டம் ஏற்படும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். 39.5 டிகிரி செல்சியஸ் வந்தால் குழப்பம், எரிச்சல், படபடப்புடன் மயக்கம், வாந்தி மற்றும் 40 டிகிரி செல்சியஸ் தொடும் போது அபாயகரமான வெப்ப வாதம், தசைப்பிடிப்பு, உயர் இரத்தம் அழுத்தம் மற்றும் மாரடைப்பு கூட ஏற்படலாம். இதனால், உடல் வெப்பநிலைக்கு ஏற்ப நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,’’ என்கிறார் அவர்.
தமிழகத்தில் தொடரும் அசம்பாவிதங்கள்
எல் நினோ பாதிப்பால் வேதிவினை மாற்றங்களும், விபத்துக்களும் ஏற்படுவதாக எச்சரிக்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுற்றுச்சூழல் பொறியாளரான பிரபாகரன் வீர அரசு.
‘‘சென்னை துறைமுகத்தில் சல்பரில் இருந்து புகை வெளியானதாக நாம் ஊடகங்களில் கடந்த வாரம் காணொளியாக காண முடிந்தது. இது குறித்து துறைமுக அதிகாரிகள் இதுவரையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படாமல் உள்ளது.
சல்பர் வேதிவினையால் புகைமூட்டம் ஏற்பட்டது போன்ற சம்பவங்கள் சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல… Red வகைப்பாட்டிலுள்ள அபாயகரமான கம்பெனிகளில் இது தொடர்கதையாகவே இருக்கிறது. 2023 என்னூரில் அம்மோனியா கேஸ் வெளியானது, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் கம்பெனியின் கேஸ் லீக், BPCL சம்பவம், Fertilizer Unitsல் வெளியேறிய கேஸ் என பல சமீபத்திய சம்பவங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
குறிப்பாக என்னூர் அருகே தாளங்குப்பம் அருகேயுள்ள கிராமங்களில், கிராம மக்கள் பல மாதங்களாக அந்தப்பிரச்சினை இருப்பதாக போராட்டமே நடத்தியும் தீர்வு இல்லை. இப்படியான சூழலில் தான் புகைமூட்டத்தை நாம் தலைமைச் செயலகம் அருகே கண்டுள்ளோம்.
சென்னை தொடர்ச்சியாக 40 டிகிரி செல்சியஸ் தொடர்கிறது. இதனால், தொடர்ச்சியாக வெயில் காரணமாக இந்த வேதிவினை நிகழ்ந்ததா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அது உறுதியானால் இது மிகப்பெரிய பிரச்சினை, இந்தியா முழுவதிலும் இது போன்ற Red வகைப்பாடு கம்பெனிகளில் உடனடியாக Climate change ரீதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது போன்ற கம்பெனிகளின் ஆய்வு குறித்து அரசுகளின் இதுவரை உள்ள அனைத்து Guidelines புதுப்பித்துல, அதில் Climate change ரீதியில் ஆய்வு வகைகளை சேர்க்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்,’’ என்கிறார் பிரபாகரன்.
El-Nino சூழலுக்கு நாம் தள்ளப்படுவதால், பருவநிலை மாற்றம், வெப்பம் அதிகரித்தல் போன்றவற்றால் சல்பர் போன்ற Chemicals எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறது, எத்தனை டிகிரி செல்சியஸின் எப்படியான மாற்றங்கள் ஏற்படுகிறதென ஒரு மீளாய்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
அதை விளக்கிய பிரபாகரன், ‘‘நாம் El-Nino காலத்தில் பயணிக்க இருப்பதால் அடுத்த ஆண்டு மே மாதம் எல்லாம் இப்போது இருப்பதைக் காட்டிலும் கடுமையான வெப்பம் நிலவும் வாய்ப்புள்ளது.

NLC நிறுவனங்கள் எங்கெல்லாம் வெளியில் நிலக்கரியை வைத்துள்ளார்களோ அங்கெல்லாம் தீவிபத்து ஏற்படுகிறது. இதைக்கண்காணிக்க NLC தற்போது தெர்மல் கேமராவுடன் டிரோன் வாயிலாக கண்காணித்து, வெப்பம் குறித்து மட்டுமே தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள். Chemicals பயன்படுத்தும் Red வகைப்பாட்டில் உள்ள அபாயகர கம்பெனிகளில் வெப்பம் குறித்து மட்டுமே நாம் தனியாக ஆய்வுகள் நடத்த வேண்டிய நிலைக்கு நாம் வந்துவிட்டோம்,’’ எனவும் வாதிடுகிறார்.
வெப்பம் என்பது கூடிக்கொண்டே செல்லும், 140 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆனால், இவை மிக விரைவில் நடக்கவில்லை. முதல் 30 ஆண்டுகளில் 0.1 டிகிரி தான் உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே 0.2, 0.3 டிகிரி என வெகு விரைவில் வெப்பம் உயர்ந்து வருகிறது. இந்த 1.5 டிகிரி என்பதே அனைத்திற்கும் Tipping Point எனப்படும் கடுமையான பாதிப்பு நிலைதான். இனி 2 டிகிரி செல்சியஸ் அதிகளிக்கும் போது அது பயங்கரமான, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக நீதி எனப் பேசிக்கொண்டிருந்த நாம் தற்போது காலநிலை நீதி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு அறிவியல் ரீதியில் இயங்க னேண்டும், என எச்சரிக்கிறார் பிரபாகரன்.
மக்கள் வெப்ப பாதிப்பை பெரிய பேரிடராக மதித்து, தங்களை வெப்ப பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். அறிவியலைத் துணைகொண்டு, காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, எதிர்வரும் சூப்பர் எல் நினோவில் இருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டயாம்.