தமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னதாக இன்று மீண்டும் கூடியது. மேகதாது பிரச்சனைக்கு ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்த நிலையில் அதற்கான விவாதம் நடைபெற்றது. தவெக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் தேவையில்லை என்றார். அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை தொடர்பாக அதிமுக தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கான வாய்ப்பு அளிக்காத பட்சத்தில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்தார். அப்போது பேசுகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் அரசு துளியும் சமரம் செய்து கொள்ளாது என தெரிவித்தார். மேலும் கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் மேகதாது பிரச்சனையை சமீபத்தில் எழுப்பிய உடனே தமிழக முதல் அமைச்சர் கடந்த மே 5, 2026 அன்று அரசு தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தியதாகவும், அத்துடன் நிற்காமல் முதல்வர் அடுத்த நாளே தனது கடிதத்தின் வாயிலாகவும், இந்திய பிரதமரை நேரில் சந்தித்தும் மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தாக கூறியுள்ளார்.
இதோடு தமிழக முதல்வர் மே 25, 2026 அன்று உத்தரவிட்டதின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் மேகதாது திட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த மே 18 ஆம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டவல்லுநர்கள் மற்றும் காவிரஜி தொழில்நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவினைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கடந்த மே 19 ஆம் தேதி மேகதாது அணை தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அதற்கான நகலையும் அந்த நாளே நேர்முகக் கடிதம் வாயிலாக முதல் அமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழக நலன் கருதி இந்த அரசு, முதல்வரின் ஆலோசனைப்படியும் மேகதாது திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுத்து வருவதாக கூறிய அவர், கடந்த நவம்பர் 13, 2025 அன்று மேகதாதுக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம், மேகதாது அணைத் திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்ததாகவும், அந்தத் தீர்ப்பின் பத்தி 29-ல் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது, இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கர்நாடகாவோ அல்லது கேரளாவோ தன்னிச்சையாகப் புதிய அனுமதிக்கப்படாத திட்டங்களைக் கையில் எடுத்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்ததாக தெரிவித்தார்.
டிசம்பர் 2025-ல் மத்திய அரசு தன்னிச்சையாகக் காவிரி நீர் வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டதாகவும், மேலும், கடந்த மே 2026 நாளிட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கடிதம் மூலம் மத்திய நீர்வள ஆணையம் (CWC) கர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கை (DPR) மீது தனது தொழில்நுட்பக் கருத்துக்களை வழங்கி அடுத்தகட்ட நகர்வுக்குக் காத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இருப்பினும், இந்த வழிகாட்டுதல்களைக் கடுமையாக எதிர்த்தும், தமிழ்நாடு அரசு 09.06.2026 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதிய காவிரி நடுவர் மன்றத்தால் பாதிப்பு இல்லை.:
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசியதோடு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவும் மேகதாது பகுதியில் எந்தவொரு கட்டுமானப் பணிகளும் அனுமதிக்கக்கூடாது என கோரிக்கையில் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும கடந்த 2018 ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட 50 சதவீத நம்பகத்தன்மை கொண்ட 177.25 டிஎம்சி தண்ணீர் பங்கீட்டை எந்தவொரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 177.25 டிஎம்.சியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரிக்கவில்லை, மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே (CWC) திருப்பி அனுப்பியுள்ளதாகவும்,எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும், புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்
மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய ஆதவர் அர்ஜூனா:
புதிதாக நடுவர் மன்றம் வரும்போது நமக்கான கால அவகாசம் கிடைக்கும். மேகதாது அணை தொடர்பாக அணையை கட்ட வேண்டுமா கட்டக்கூடாதா? . மேகதாதுவிற்காக மட்டுமே புதிய நடுவர் மன்றம் உருவாக்க தயாராக உள்ளோம்.
கர்நாடகா மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறி சட்ட சிக்கல் நிறைந்த மற்றொரு ஸ்டேடர்ஜியை கர்நாடக அரசு எடுக்கிறது. கர்நாடகா அரசு மேகதாது அணையில் புதிதாக அணையை கட்டுவதாக கூறுகிறது. இதனை தடுக்க புதிதாக ஒரு நடுவர் மன்றம் புதிதாக உருவாக்க வேண்டும் என முதல்வர் முடிவெடுத்துள்ளார். தமிழக மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் நாம் ஒரே கூட்டணியாக எப்பொழுதும் குரல் கொடுப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நமது தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவார் இது ஒரு லீகல் ஸ்டேட்டர்ஜி என்பதை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம்.