இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை எவரும் எட்டாத பிரம்மாண்டமான உலக சாதனை ஒன்றை நேற்றைய ஆட்டத்தில் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம், சர்வதேச அளவில் 200 டி20 (T20I) போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் (ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவையும் சேர்த்து) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியைத் தொடங்கிய ஹர்மன்பிரீத், தற்போது 17 ஆண்டுகளைக் கடந்து இந்த இமாலய இலக்கை அடைந்துள்ளார். நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார் மற்றும் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இணைந்து, ஹர்மன்பிரீத்துக்கு ‘200’ என எழுதப்பட்ட சிறப்பு ஜெர்சி மற்றும் தொப்பியை வழங்கி கௌரவித்தனர்.
அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:
- ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா) – 200 போட்டிகள்
- சூசி பேட்ஸ் (நியூசிலாந்து) – 184 போட்டிகள்
- டேனி வியாட்-ஹாட்ஜ் (இங்கிலாந்து) – 183 போட்டிகள்
(ஆண்கள் பிரிவில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 163 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).
