அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மறுமதிப்பீடு: 300% முதல் 400% வரை உயர்வு எனக் குற்றச்சாட்டு; மாநகராட்சி விளக்கம்.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சில சொத்துகளுக்கு 300% முதல் 400% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குள் மீண்டும் அதிக அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கும் வரி உயர்வு குறித்த புள்ளிவிவரங்களும்

2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீராய்வின் அடிப்படையில், ஒரு சொத்தின் அரையாண்டு சொத்து வரி ரூ.8,825-லிருந்து ரூ.20,960 ஆக உயர்த்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது சுமார் 137 சதவீத உயர்வாகும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள மறுமதிப்பீட்டு அறிவிப்புகளில் சில சொத்துகளுக்கான வரி பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.

உதாரணமாக, சென்னை மாநகராட்சி மண்டலம் 3, 30வது வார்டைச் சேர்ந்த ஜி. பிரகாசம் என்பவருக்கு 06.08.2026 அன்று வழங்கப்பட்ட அறிவிப்பு எண் SP2/26-27/0035391-இல், முன்பு அரையாண்டு சொத்து வரியாக ரூ.295 செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.3,255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கட்டத்தில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்படுவது எந்த வகையில் நியாயமானது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் முக்கிய குற்றச்சாட்டுகள்

தனியார் நிறுவனங்களின் பங்கு:GIS (Geographic Information System) தொழில்நுட்பத்தின் மூலம் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய மூன்றாம் தரப்பு அல்லது தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவற்றின் ஒப்பந்தம், பணிவரம்பு, செலவு, ஆய்வு முறை மற்றும் இறுதி அறிக்கை ஆகியவற்றை மாநகராட்சி வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.

சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு:300% முதல் 400% வரை வரி உயர்த்தப்பட்டால், ஏற்கனவே வாடகை, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு கடைகள், பட்டறைகள் மற்றும் வீட்டுத் தொழில்கள் மேலும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தில் தாக்கம்:சொத்து வரி மறுமதிப்பீட்டால் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டணங்களிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.உலக வங்கி நிபந்தனைகள் குறித்த கேள்வி:நகர்ப்புற மேம்பாட்டுக்காக உலக வங்கி அல்லது பிற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் கடன்களின் நிபந்தனைகளின் காரணமாகவே இத்தகைய வரி மறுமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

மாநகராட்சி மன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டதா?

பல லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி மன்றத்திலோ அல்லது வரி மற்றும் நிதி மதிப்பீட்டுக் குழுவிலோ உரிய விவாதம் நடத்தப்பட்டதா என்பதையும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

கூட்டமைப்பின் கோரிக்கைகள்

வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே. சண்முகம் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். ஜெயராமன் (MC) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்பட்டுள்ள அதிக அளவிலான சொத்து வரி மறுமதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2022ஆம் ஆண்டு சீராய்வுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அனைத்து மறுமதிப்பீடுகளின் முழு விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

300%, 400% அல்லது அதற்கு மேல் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொத்துகளுக்கு சிறப்பு மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய வரிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சொத்து வரி மறுமதிப்பீட்டால் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களில் கூடுதல் சுமை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி தனது வருவாயை அதிகரிக்க நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கும், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி விளக்கம்

இதற்கிடையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

மாநகராட்சியில் ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்தவர்களுக்கு, உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் தொடர்பாக ஆட்சேபனை இருப்பவர்கள், அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அவை 30 நாட்களுக்குள் பரிசீலித்து தீர்வு காணப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவிவரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of லோகேஷ் ராஜவேல்

லோகேஷ் ராஜவேல்