தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் இலங்கை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 2015ம் ஆண்டு அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், இந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
10 வருட கடூழிய சிறைத் தண்டனை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த நபரை இந்திய பாதுகாப்பு பிரிவினர் நாடு கடத்தியிருந்தனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர், நேற்று முன்தினம் (அக்டோ.26) இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகநபர் தொடர்பில் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 72 மணிநேர தடுப்பு காவல் உத்தரவின் பேரில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்திருந்த போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு தரப்பினர் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல நபர்கள் இலங்கையிலும் அவ்வப்போது கைது செய்யப்பட்டிருந்தனர்.