அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சிறுவர்களை சமூக ஊடகங்களில் பயன்படுத்த இலங்கையில் கடுமையான சட்டம்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்களை ஆபத்தான விதத்தில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைவதற்கும், பணம் ஈட்டுவதற்கும் பெற்றோரும் பெரியவர்களும் சிறுவர்களை பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்தும் போக்கு அதிகரித்து வருவதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த புதிய சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் கூறுகின்றார்.

சிறுவர்களை ஆபத்தான இடங்களுக்கும் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வது, ஆபாசமான மொழியைப் பயன்படுத்த ஊக்குவிப்பது, பெரியவர்களுக்கு மட்டுமே பொருத்தமான உள்ளடக்கங்கள் (Contents) அல்லது கருப்பொருள்களில் (Themes) ஈடுபடுத்துவது, பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கங்களுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றது.

பணம் அல்லது புகழைத் தேடும் நோக்கில் பெற்றோரே தமது பிள்ளைகளை ஆபத்தில் ஆழ்த்தும்போது, பெற்றோர்களாகத் தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்தளவிற்குப் பொருத்தமானவர்கள் எனும் தீவிரமான கேள்விகள் எழுவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுவர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்க பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை என்பதை அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

ஒரு பிள்ளை பிரபலத்தையோ அல்லது பொதுமக்களின் கவனத்தையோ பெற வேண்டுமா என்பதைப் பெற்றோரால் தீர்மானிக்க முடியாது என கூறிய அவர், மாறாக, பிள்ளைகள் முதிர்ச்சி அடைந்து, தாங்களாகவே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முதிர்ச்சியை எட்டிய பின்னர் இது அவர்களாக மேற்கொள்ளும் தனிப்பட்ட ஒரு முடிவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் பொறுப்பற்ற சமூக ஊடகப் பயன்பாடு காரணமாகக் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தப்படும் சிறுவர்கள், பாதுகாப்புத் தேவைப்படும் சிறுவர்களாகக் கருதப்பட வேண்டியிருக்கலாம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

அவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் இத்தகைய சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சிறுவர் காப்பகங்களில் அவர்களைப் பேண வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, சிறுவர்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்ட ஊடக கலாசாரத்தை வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து, ஒரு நிபுணர் குழுவின் மூலம் வழிகாட்டுதல்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இந்த வழிகாட்டுதல்களின் தயாரிப்புப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன, மேலும் அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களில் சிறுவர்களை வணிக இலாபத்திற்கோ அல்லது தனிப்பட்ட புகழுக்காகவோ பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக உலகெங்கிலும் உள்ள நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இது “கிட்ஃப்ளுவன்சிங்” (Kidfluencing) என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற இடங்களில், சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் ஈட்டும் வருமானமானது அவர்களின் எதிர்கால நன்மைக்காகப் பாதுகாக்கப்பட்ட கணக்குகளில் வைப்பிலிடப்படுவதனை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கென உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் பிரதானமான சமூக ஊடக தளங்களும் கடுமையான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம், சமூக ஊடகங்களில் சிறுவர்கள் சுரண்டப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக இதே போன்றதொரு பாதுகாப்புக் கட்டமைப்பினை நிறுவுவதற்கான இலக்கினை இலங்கை நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh