ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்மித்த பகுதியானது, அதிவுயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் அந்த இடத்தில் போராட்டம் நடாத்தப்படக்கூடாது என கொழும் பு- கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள், கூடாரங்களை அகற்றி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த பிக்குகளின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கண்டி நகரிலிருந்து கொழும்பை நோக்கி நடைபவணியாக சென்ற பௌத்த பிக்குகள் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தை அண்மித்திருந்தனர்.
இவ்வாறு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பௌத்த பிக்குகள், ஜனாதிபதியை சந்திக்க முயற்சித்த தருணத்தில், போலீஸாருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜனாதிபதி செயலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் கீழ் விடுதலை செய்வது எப்போது என பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலாளரிடம் வினவியிருந்தனர்.
அதற்கான கால எல்லை தம்மால் கூற முடியாது என ஜனாதிபதி செயலாளர் கூறிய நிலையில், பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் போராட்டத்தை நடாத்துவதறகான அறிவிப்பை வெளியிட்டனர்.
இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்த பௌத்த பிக்குகள் தொடர் போராட்டத்தை நடாத்த முயற்சி செய்தனர்.
எனினும், கூடாரங்களை போலீஸார் அகற்றுவதற்கு முயற்சித்ததை அடுத்து, அங்கு அமைதியின்மை நிலவியது.
இந்த நிலையில், கூடாரங்களை அமைத்த பௌத்த பிக்குகள் தொடர் போராட்டத்தை நடாத்தியிருந்தார்கள்.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் உறுதியான பதிலொன்றை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் தெரிவிக்கின்றனர்.
அரசியலமைப்பின் பிரகாரம், சட்ட நடைமுறைகளை பின்பற்றி செயற்பட ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் செய்வதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
போலீஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிவுயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு ஏன் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருந்த தருணத்தில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவினால், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி அவர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழங்கப்பட்டது.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என தீர்மானித்த உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை வலுவிழக்கும் தீர்ப்பை வழங்கியிருந்தது.
எவ்வாறாயினும், பொதுமன்னிப்பு வலுவிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ம் தேதி திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதேவேளை, கொழும்பு மேல்நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் விசாரிக்கப்படும் வழக்கில் தேரர் முன்னிலையாகாததை அடுத்து, அந்தந்த நீதிமன்றங்களினாலும் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியிருந்த பின்னணியில், போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், களுத்துறை – தீனியாகல பகுதியிலுள்ள வனாந்தரமொன்றிலுள்ள விகாரையொன்றில் வைத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 5ம் தேதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத் தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை நடைமுறைப்படுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
காவி உடையின்றி, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு கடந்த 6ம் தேதி அழைத்து வரப்பட்டார்.
இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான மற்றுமொரு வழக்கு விசாரணைகளுக்காகவே அவர் அன்றைய தினம் அழைத்து வரப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, காவி உடை சிறைச்சாலை அதிகாரிகளினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிற ஆடை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, அவர் கடந்த 6ம் தேதி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன்போது, காவி உடைக்கு பதிலாக சிறை கைதிகளின் ஆடை அணிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த பீடங்களுக்கிடையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
காவி உடையை நீக்க வேண்டும் என்றால், அதற்கான அங்கீகாரத்தை பௌத்த பீடங்களே வழங்க வேண்டும் என பௌத்த பிக்;குகள் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பௌத்த பீடங்களின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர்.
மூன்று வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்படும் பட்சத்தில், சிறை கைதிகளுக்காக ஆடை அணிவது கட்டாயம் என்ற விடயத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
எனினும், சிறை வைக்கப்படும் பௌத்த பிக்குகள் தொடர்பில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டிருந்தார்.
இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது காவி உடையை அணிவிக்க நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணக்கம் வெளியிட்டிருந்தார்.