இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூனம் ராவத், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அக்டோபர் 15, 2026 அன்று அறிவித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான அவர், 2017 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதில் முக்கியப் பங்காற்றினார்.
சர்வதேசப் போட்டிகளில் 3,282 ரன்கள்:
இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 35 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள பூனம் ராவத், மொத்தம் 3,282 ரன்கள் எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 264 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,299 ரன்களும், டி20 போட்டிகளில் 719 ரன்களும் அடங்கும்.
2017 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டம்:

இங்கிலாந்தில் நடைபெற்ற 2017 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பூனம் ராவத் 381 ரன்கள் குவித்தார். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில், 229 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்காக அவர் 115 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.இருப்பினும், இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தீப்தி சர்மாவுடன் சாதனை கூட்டணி:
2017 மே மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் நாற்கரத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பூனம் ராவத் மற்றும் தீப்தி சர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் சேர்த்தனர்.பூனம் ராவத் 109 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறினார். தீப்தி சர்மா 188 ரன்கள் விளாசினார். இந்தக் கூட்டணி அப்போது மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனையாகப் பதிவானது.
சர்வதேசப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி:
பூனம் ராவத் கடைசியாக 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது அவரது ஓய்வு அறிவிப்பின் மூலம் 17 ஆண்டுகளாக நீடித்த சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக, 2017 உலகக் கோப்பையில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.