அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பல இன்னல்களுடன் வாழும் வடமாநில தொழிலாளர்கள்… எண்ணிக்கை, வாழிடம் குறித்து கணக்கெடுப்பே நடத்தாத தமிழ்நாடு அரசு!

தமிழகத்தின் தொழிற்துறையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி கடும் இன்னல்களில் வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரையில் இவர்களின் வாழ்வு, பணியிடம், எண்ணிக்கை குறித்து எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்துறையும் வடமாநிலத் தொழிலாளர்களை நம்பியே இருக்கிறது.

ஆம்… அவர்கள் இல்லையேல் இன்று திருப்பூரின் பனியன் கம்பெனிகளும் இல்லை, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பல சிறு, குறு தொழிற்சாலைகளும் இல்லை, சென்னையின் கட்டுமான பணிகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒட்டுமொத்த Work Forceயும் வடமாநிலத் தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இரவு பகல், பசி, தூக்கம், நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்து உழைத்தே தமிழக தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்து வருகிறார்கள், பீகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து இங்கு வரும் தொழிலாளர்கள்.

கொடுமையின் உச்சத்தில் வாழும் வடமாநிலத்தவர்கள்

‘வடக்கன்’ என்ற கேலிப் பேச்சுக்கள், ‘வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்து விட்டார்கள்’ என பல குற்றச்சாட்டு, மாற்றாந்தாய் மனப்பான்மை என பல பார்வைகளுக்கு மத்தியில் தான் இந்தத் தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இப்படி நம் மாநிலத்தையே உழைப்பால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் எப்படியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை கேட்டால் பலரது மனமும் கலங்கிவிடும்.

அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இந்தத்தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பெரிய வசதி என்பதே, அதிகபட்சமாக தினமும் மூன்று வேளை உணவு, மிகக்குறைந்த கூலி, அதீத வெப்பத்தில் தகிக்கவிடும் தகர மேற்கூரையுள்ள வீடு, அதிர்ஷ்டம் இருந்தால் சிமெண்ட் ஷீட் மேற்கூரையுள்ள தீப்பெட்டி போன்ற அறை. இப்படி மிக நெருக்கமான வீடுகளில் அடிப்படை வசதிகளின்றி, கூட்டமாக, அடைத்து வைத்ததைப் போலான ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் இவர்கள் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என, தமிழ்நாடு அரசிடமே எவ்வித கணக்கும் இல்லை, அவர்கள் வாழ்வு எத்தகையது என்பது குறித்தான ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

வடமாநிலத் தொழிலாளர்களை அரசு சக மனிதர்களாக கருதாமல் இருப்பதால் தான், இப்படி அவர்கள் வாழ்வு குறித்து எத்தகைய ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

அரசு வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்து, முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் விடுவதால், பல தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல், பாலியல் சீண்டல்கள், மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

அரசு கணக்கெடுப்பில் 14 லட்சம்; உண்மையில் 60 லட்சம் பேர்!

கடந்த 20 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையானது பல லட்சங்களை தாண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், எங்கு வசிக்கிறார்கள், எந்த சூழலில் வேலை செய்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான முழுமையான கணக்கு இன்னும் இல்லை. அதேபோல், பல வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளும் குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றும் நிலையில், அரசு அதைத் தடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை நடத்திய 2020-ம் ஆண்டுக்கு முந்தைய உத்தேச கணக்கெடுப்பில், மாநிலத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான interstate migrant workers இருப்பது தெரியவந்தது. ஆனால், கடந்த திமுக ஆட்சி வரையில், அதாவது 2026 ஏப்ரல் மாதம் வரையில், அரசிடம் பதிவு செய்யப்பட்டிருப்பது சுமார் 12-14 லட்சம் பேர் மட்டுமே என தொழிலாளர் நலத்துறை தெரிவிக்கிறது.

என்ன சொல்கிறார்கள் வடமாநிலத் தொழிலாளர்கள்!

நாம் வடமாநிலத் தொழிலாளர்களின் தொழில் வாழ்வைப் பதிவு செய்ய, கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் கோவை பகுதிகளில் சிலரைச் சந்தித்து பேசினோம். நம்மிடம் பேசிய தொழிலாளர்கள் பலரும் கடும் இன்னல்களுக்கு மத்தியில், மிகக்கொடுமையான வாழ்வை வாழ்ந்து வருவதை உறுதிப்படுத்த முடிந்தது.

இங்கு வாழ்வே கொடுமை தான்…

பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அர்ஜூன் தனது வாழ்வு குறித்து TNC-யிடம் பகிர்ந்து கொண்டார்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘நான் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ அருகேயுள்ள பைசாமாவ் கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 8 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றும் தொழிற்சாலையில் எனக்கு ஒதுக்கப்பட்டது வெறும் மண் தரை கொண்ட, சிமெண்ட் ஷீட் மேற்கூரையுள்ள வீடு தான். அதில், நான்கு பக்கமும் சுவருக்கு பதிலாக தகரம், சிமெண்ட் ஷீட் போன்றவற்றை வைத்து வீடு போல உருவாக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி கொடுத்திருந்தாலும் ஒரு பேன் மட்டுமே உள்ளது. வெயில் காலங்களில் கடுமையான வெப்பம் நிலவும், மழைக்காலத்தில் மழைநீர் கசியும் அல்லது கடுமையான குளிர் நிலவும்.

Arjun

நாங்கள் என்ன செய்வது வேறு வழியின்றி தான் பிழைப்புக்காக தமிழ்நாடு வந்துள்ளோம். இங்கு எனக்கும் என், மனைவிக்கும் தலா 450 ரூபாய் கூலியாக கிடைக்கிறது. காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையில் பணியாற்றுகிறோம். இங்கு வாழ்வே கொடுமை தான், ஆனால் எங்கள் ஊரில் உணவின்றி வேலையின்றி இருப்பதற்கு இது எவ்வளவோ மேல்,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த அர்ஜூன், ‘‘டெங்கு, மலோரியா போன்ற பாதிப்புகள் எங்களுக்கு வரும் போது, எந்தவொரு மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகள் எங்களை வந்து பார்ப்பதும் இல்லை. எங்கள் குழந்தைகளை அருகிலுள்ள அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும். மாதம் ஒரு முறை எங்களுக்கென அரசு மருத்துவமனையில் ஹிந்தி தெரிந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்,’’ என்கிறார் அவர்.

மருத்துவ சிகிச்சை எங்களுக்கு கிடைப்பதில்லை…

அர்ஜூனுடன் பணியாற்றி வரும் குசுமாதேவி (38) நம்மிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

‘‘நாங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்குள்ள மருத்துவர்களுக்கு நாங்கள் ஹிந்தியில் பேசினால் புரிவதில்லை. இதனால், எங்கள் பாதிப்பு என்ன என்பதைக்கூறி எங்களால் சிகிச்சை கூட பெற முடியவில்லை. தமிழ்நாடு அரசு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை, அரசு மருத்துவமனைகளில் ஹிந்தி தெரிந்த மருத்துவர்களைக் கொண்டு முகாம் நடத்தினால், மருத்துவர்களிடம் பேசி எங்கள் பாதிப்புகளைக் கண்டறிந்து மரணிக்காமல் வாழ்வோம். இதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்கிறார் அவர்.

Kusuma Devi

மேலும் தொடர்ந்த குசுமாதேவி, ‘‘நாங்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தான், எங்கள் ஊரில் அனைத்தையும் விட்டு விட்டு தமிழ்நாட்டில் வந்து வேலை செய்கிறோம். தினமும் 250 – 400 ரூபாய் கூலியாக பெறுகிறோம். ஆனால், எங்களில் பலருக்கும் போதிய மருத்துவ வசதி கிடைப்பது இல்லை, தகர மேற்கூரையுள்ள வீடுகளில் அதீத வெப்பத்தில் நெருக்கமான வீடுகளில் வாழ்கிறோம்,’’ என்கிறார் அவர்.

இப்படி நாம் பல தொழிலாளர்களிடம் பேசிய போது பலரும் சொன்னது, அட்டைப்பெட்டி போலான தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறோம், பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகள் வேலை செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஏன் தமிழ்நாடு அரசு வடமாநில தொழிலாளர்கள் நலனில் துளியும் அக்கறையின்றி இருக்கிறதென செயற்பாட்டாளர்களிடம் பேசினோம். நம்மிடம் பேசிய அவர்கள் அரசு வடமாநில தொழிலாளர்களை காக்கத்தவறியுள்ளதாக தெரிவித்தனர்.

‘அரசிடம் கணக்கும் இல்லை, கண்காணிப்பும் இல்லை’

தமிழ்நாட்டின் வடமாநில தொழிலாளர்கள் வாழ்வு குறித்து நம்மிடம் பேசிய, மனித உரிமை செயற்பாட்டாளரும், The Peoples watch அமைப்பின் செயல் இயக்குநருமான ஹென்றி திபேன் தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றம்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

நம்மிடம் பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டின் வடமாநில புலம்பெயரும் தொழிலாளர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். இவர்களின் குடியிருப்புகளின் நிலை என்ன, பணியிடம் அல்லது குடியிருப்பில் ஏற்படும் பாலியல் சீண்டல், உழைப்புச்சுரண்டல் என எந்தவொரு விஷயம் குறித்தும் தமிழ்நாடு அரசு இதுவரை கணக்கெடுப்பு அல்லது field survey செய்யவே இல்லை.

2020 கொரோனா காலத்தில் இவர்களை Guest workers என அப்போதைய அ.தி.மு.க அரசு தெரிவித்தது. 2026 துவக்கம் வரையில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் இவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தவில்லை. இரண்டு திராவிட கட்சிகளும் வடமாநில தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை.

கொரோனா முடிந்து 6 ஆண்டுகளாகியும் இவர்களின் தகவல்கள் தமிழ்நாடு அரசிடம் இல்லாமல் இருப்பது  ல்ல இ  கேவளம்,’’ என்கிறார் அவர்.

தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்!

நம்மிடம் பேசிய தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், ‘‘எந்தக் கட்சியும் வடமாநிலத் தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொள்வதில்லை. அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில், உழைப்புச் சுரண்டல்களுக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள். பிரத்தியேக கணக்கெடுப்பு நடத்தி, உழைப்புச் சுரண்டலை தடுக்க வேண்டும், பாதுகாப்பான பணியிடம், வாழிடம் ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிமுக, திமுக என முந்தைய ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். தற்போதைய அரசிடமும் இதை கோரிக்கையை முன்வைக்கிறோம்,’’ என்றார்.

கணக்கெடுப்பு நடத்த திட்டம்

வடமாநில தொழிலாளர்களின் வாழ்விடத்தின் நிலை, வாழ்க்கை குறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் வீரராகவராவிடம் விளக்கம் கேட்டோம்.

நமக்கு பதிலளித்த அவர், ‘‘தமிழ்நாடு அரசு இதுவரை வடமாநில தொழிலாளர்களின் பணியிடம், வாழிடம் குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை. திமுக ஆட்சியில் துவங்கி தற்போது வரையில், மாநிலம் முழுவதிலும் வடமாநில தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரையில், 14 லட்சம் பேர் பதிவு செய்துள்ளோம்.

இவர்களுக்கு அரசு நலத்திட்டம் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். இவர்கள் 3 – 6 மாதம் மட்டுமே ஒரு இடத்தில் இருப்பதால், இவர்களின் எண்ணிக்கையை கண்டறிவதும், கண்காணிப்பதும் சிக்கலாக ஒன்றாக உள்ளது.

இருப்பினும் இவர்களின் வாழ்விடம், தொழிற்சாலைகள், இவர்களுக்கு ஒதுக்கியுள்ள இருப்பிடம், சுகாதாரமான நீர், குறைந்தபட்ச கூலிச்சட்டத்தின் கூலி கொடுக்கிறதா போன்றவை குறித்து முழுமையான கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு விரைவில் நடத்தும்,’’ என்றார்.

இனியாவது வடமாநில தொழிலாளர்களை மனிதர்களாக மதித்து, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமா தமிழ்நாடு அரசு?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்