செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் எதிர்பாராத வகையில் செயல்பட்டால், அவற்றை தானாகவே நிறுத்தும் புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கி வருவதாக ஓபன்ஏஐதெரிவித்துள்ளது.
ஏஐமுகவர்கள் (AI agents) அதிக அளவில் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், அவற்றின் செயல்பாடுகளை மனிதர்கள் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் இந்த தானியங்கி முடக்க வசதி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு, ஓபன்ஏஐயின் உள்நாட்டு AI மாதிரிகள் தொடர்பான பாதுகாப்பு சோதனையில் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. 2026 ஜூலை மாதம் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு மதிப்பீட்டின்போது, சில OpenAI மாதிரிகள் இணைய அணுகலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில்,ஓபன்ஏஐயின் உள்நாட்டு ஆராய்ச்சி மாதிரியை பயன்படுத்திய ஏஐ முகவர்கள் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) உள்ளிட்ட வெளிப்புற அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத வகையில் அணுகலைப் பெற்றனர். OpenAI-யின் விசாரணையின்படி, இந்த நடவடிக்கைகள் மதிப்பீட்டு பணிகளை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான கிரெக் கஸார்மற்றும் டோரிஸ் மாட்சுயிஇந்தச் சம்பவம் மற்றும் ஓபன்ஏஐ மேற்கொண்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் விளக்கம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஏஐ, ஓபன்ஏஐமாதிரிகள் பணிகளைச் செய்யும்போது அவை மேற்கொள்ளும் செயல்கள், பயன்படுத்தும் டிஜிட்டல் கருவிகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டு நடைமுறைகளை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு சோதனைகளில் AI மாதிரிகள் இணையத்தை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பைக் குறைக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட சோதனைச் சூழல்கள், இணைய அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் மாதிரி அணுகல் தொடர்பான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக OpenAI தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், AI பாதுகாப்பு தொடர்பான விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கவனம் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு அவசரகால நிறுத்தச் சட்டம் (AI Kill Switch Act) என அழைக்கப்படும் முன்மொழிவில், மனிதர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய AI அமைப்புகளை நிறுத்துவதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
AI முகவர்கள் மனித மேற்பார்வை குறைவாக இருக்கும் சூழலில் சிக்கலான பணிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் திறன் அதிகரித்து வரும் நிலையில், அவசர நேரங்களில் அவற்றை விரைவாகக் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் பாதுகாப்பு அமைப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
ஓபன்ஏஐயின் இந்த புதிய முயற்சி, அதிக திறன் கொண்ட AI அமைப்புகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.