அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சாத்தான்குளம் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பு! வழக்கில் நடந்தது என்ன?

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்கப் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, ஒன்பது போலீஸாருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துக்குமரன், ‘இது சாதாரண வழக்கு கிடையாது, வேலியே பயிரை மேய்ந்தது போல தந்தை, மகனை கொடூரமாகத்தாக்கி சாகடித்துள்ளனர்,’ எனக்கூறியுள்ளார்.

இந்தியாவை அதிரச்செய்த லாக்கப் மரண சம்பவங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, தமிழ்நாட்டின் சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் கொலை வழக்கு. போலீஸாரின் மனிதாபிமானமற்ற கொடூரத்தாக்குதலை சந்தித்த இருவரும் மரணித்து 5 ஆண்டு ஆண்டுகள் கடும் இழுபறிக்குப்பின் பரபரப்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடையை நடத்தி வந்தனர்.

2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் Lockdown அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் முதலில் ஜெயராஜை வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், அவர்களுக்குப்பின்பு பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது.

இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்துள்ளனர். ஆனால், விசாரணையில் போது போலீஸார் அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பவத்தின் போது சாத்தான்குளம் போலீஸார் பதிவுசெய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், ‘’காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும், 23ம் தேதி ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் சாத்தான்குளத்தில் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த பென்னிக்ஸின் குடும்பத்தினர், ‘‘ஜெயராஜ் மீதும், பென்னிக்ஸ் மீதும் இதுவரையில் எந்த குற்ற வழக்கும் இருந்ததில்லை. கடைக்கு வந்து ஜெயராஜை அழைத்துச்சென்ற போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவரை அடித்து கீழே தள்ளியுள்ளனர். அப்போது, இதைக் கண்ட பென்னிக்ஸ் போலீஸாரிடம் கேட்டதற்கு, போலீஸை அவர் எதிர்த்துப் பேசியதாக்கூறிய போலீஸார் ‘ஈகோ’வால் இருவரையும் தடுமையாக தாக்கியதில் பரிதாபமாக மரணித்துள்ளனர்,’’ எனப் பேட்டியளித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் இழுத்தடிப்பு!

போலீஸார் இந்த வழக்கில் கடும் தவறு இழைத்துள்ளது கண்டறியப்பட்டதால், ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை – மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. சம்பவம் நடந்து சில நாட்களிலேயே இந்த வழக்கு சி.பிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது,  இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்து வழக்கின் திசையை மாற்றியது. தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக, மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இருந்தார். இவருடன் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு!

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது.

இப்படியான நிலையில், இவ்வழக்கில்  கடந்த மார்ச் 23ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிஐ சார்பில் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனால் வழக்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி வழக்கு ஏப்ரல் 2 அன்று வந்த போது சிபிஐ சார்பிலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பிலும் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

குற்றவாளிகள் சார்பில் ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இரண்டு தரப்பு வாதத்தையும் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

‘வேலியே பயிரை மேய்ந்ததுபோல – தந்தை மகனை சாகடித்துள்ளனர்’

அதன்படி இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி முத்துக்குமரன், ‘‘காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூக சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்றவழக்கும் இல்லை என்றே தெரிகிறது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிப்பதா? மரண தண்டனை விதிப்பதா? என கேள்வி வரும் போது, அரிதினும் அரிதான வழக்குகளில், ஆயுள் தண்டனை போதுமானதல்ல எனும் போதும், எதிரி திருந்த வாய்ப்பில்லை எனும் போதும் மரண தண்டனை விதிக்கலாம்.

குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள்; படித்தவர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.

சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு. அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.’’ என, நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்தத்தீர்ப்பு பென்னிக்ஸ் – ஜெயராஜ் மரணத்திற்கு கிடைத்த நீதி எனவும், அதிகார துஷ்பிரயோகம் செய்து சாமானியர்களை வேட்டையாடும் போலீஸாருக்கு இது ஒரு பாடம் எனவும், சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk