தமிழகத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர். அரசியல் ரீதியாகப் பல முனைப் போட்டிகள் நிலவும் இந்தத் தேர்தலில், முன்னணித் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.
அஜித்குமார்: அதிகாலையிலேயே ஜனநாயகக் கடமை.
திரைத்துறையைப் பொறுத்தவரை, நடிகர் அஜித்குமார் அவர்கள் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து முதல் ஆளாக வாக்களித்தார். எவ்வித ஆரவாரமும் இன்றி, அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றது. அவரைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விக்ரம், தனுஷ், த்ரிஷா, ராதிகா சரத்குமார், குஷ்பூ, ஜெய், கௌதம் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.










அரசியல் தலைவர்களின் வருகை :
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர் அதில் குறிப்பாக,
அதிமுக: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தார். பின்னர்ச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களாட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு வாக்காளரும் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
திமுக: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் வாக்களித்தனர். திமுகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி வாக்களித்த பின், “வரலாறு திரும்பும், மீண்டும் திமுக ஆட்சியே அமையும்” எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது என்பதால், அவரது வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் வெள்ளத்திற்கு இடையே வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவர், மாற்றத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தனது செயலின் மூலம் வெளிப்படுத்தினார்.
பாஜக: தமிழகப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர். மத்திய இணையமைச்சர் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் சென்னை மற்றும் கோவை பகுதிகளில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தேசிய அளவில் மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிற தலைவர்கள்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களுடனும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்துடனும் வந்து வாக்களித்தனர்.








தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும், திரை உலகினரும் காட்டிய அதே ஆர்வத்தை மக்களாகிய நாமும் காட்ட வேண்டும். மாலை 6 மணி வரை கால அவகாசம் உள்ளதால், இதுவரை வாக்களிக்காதவர்கள் உடனே வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்!