இந்திய மருத்துவ முறையில் பல நூற்றாண்டுகளாக ‘மூலிகைகளின் ராணி’ எனப் போற்றப்படும் அஸ்வகந்தா, தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அஸ்வகந்தா பெயரில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களும் பாதுகாப்பானவை அல்ல என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஸ்வகந்தா செடியின் இலைகளை உணவாகவோ, மருந்தாகவோ அல்லது சாறாகவோ உட்கொள்வதற்கு FSSAI தற்போது தடை விதித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அந்த இலைகளில் உள்ள ‘வெத்தாபெரின் ஏ’ (Withaferin A) என்ற வேதிப்பொருள் ஆகும்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி:
- இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- இலைகளை உட்கொள்வது பாதுகாப்பானது என்பதற்குப் போதிய அறிவியல் பூர்வமான தரவுகள் (Safety Data) இல்லை.


சர்வதேச ஆய்வுகள் கூறுவது என்ன?
டென்மார்க் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் அஸ்வகந்தா குறித்த சில அச்சங்களை எழுப்பியுள்ளன. அவற்றின் ஆய்வுகளின்படி, அஸ்வகந்தாவை முறையாக உட்கொள்ளாவிட்டால்:
- கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகலாம்.
- செரிமானக் கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் அஸ்வகந்தா இலைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அதன் வேர்களுக்குப் பொருந்தாது என்றும் இந்திய நிபுணர் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
உலக சுகாதார நிறுவனம் (WHO) அஸ்வகந்தா வேர்களின் மருத்துவக் குணங்களை அங்கீகரித்திருந்தாலும், போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் பின்வருவோர் இதனைத் தவிர்ப்பது நல்லது:
- கர்ப்பிணிப் பெண்கள்.
- பாலூட்டும் தாய்மார்கள்.

நாம் கவனிக்க வேண்டியவை:
மத்திய அரசின் நிபுணர் குழுவின்படி, தரக்குறைவான தயாரிப்புகள் அல்லது அதிகப்படியான அளவு (Overdosage) உட்கொள்ளும் போது மட்டுமே கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அஸ்வகந்தா வேர்கள் தைராய்டு அளவைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு, ஆரோக்கியமான மனிதர்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.
இயற்கையான மூலிகை என்பதால் ஒரு செடியின் அனைத்துப் பாகங்களும் பாதுகாப்பானவை என்று கருதிவிட முடியாது. எனவே, இனி நீங்கள் அஸ்வகந்தா பொடியையோ அல்லது அது கலந்த உணவுகளையோ வாங்கும் போது, அது அதன் வேரிலிருந்து (Root extract) தயாரிக்கப்பட்டது தானா என்பதை லேபிளில் சரிபார்த்து வாங்குவதே புத்திசாலித்தனம்.