அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த 28 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க படைகளைக் குறி வைத்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்கா 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யைப் பெற்றுக் கொள்ள தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இதுக்குறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட அறிக்கையில், போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் பெரும் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில், இந்தியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அதுவும் 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக வழங்கப்படுவதாகவும் தங்களுடைய அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும் என்பதோடு, கச்சா எண்ணெய் விநியோக தடையைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உலகளாவிய எரிசக்தி சந்தையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்வதையும் இது தடுக்க உதவியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.