அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழகம் வரை கொந்தளித்த திலீபன் சிலையை அப்புறப்படுத்திய விவகாரம் – தற்போது நடப்பது என்ன?

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான தனது உயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் உருவச் சிலையை போலீஸார் அகற்றிய சம்பவம், சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மாத்திரமன்றி, தமிழக அரசியல் மேடைகளிலும் இந்த விடயம் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

திலீபனின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி, யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் அவரது சிலையொன்று வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக 12 நாட்கள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்த பின்னணியில், இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றன.

இவ்வாறான பின்னணியில், திலீபனின் சிலையை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போலீஸார், அப்புறப்படுத்தியிருந்தனர்.

திலீபனின் நினைவாலயத்திற்கு அதிகாலை 6.30 அளவில் வருகைத் தந்த போலீஸார், அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை அப்புறப்படுத்தி, போலீஸ் வாகனத்திற்கு ஏற்றி செல்லும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எழுப்பப்பட்ட குரல், தமிழகத்திலும் தற்போது எழுப்பப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

போலீஸாரினால் அப்புறப்படுத்தப்பட்ட சிலையை, அதே இடத்தில் நிறுவுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வெளியான எதிர்ப்பு

தியாகதீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் இந்த ஒடுக்குமுறையை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் தமிழ் மக்கள் அவரது திருவுருவச் சிலையை நிறுவி அவருக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் இந்த உணர்வைக் காயப்படுத்தும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் வகையிலும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் அவரது சிலையை அப்புறப்படுத்தியிருப்பது அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது

இவர்கள் இடதுசாரிகள், முற்போக்கானவர்கள் என்கிற தோற்றம் உண்மையல்ல என்பதை உலக மாந்தருக்கு உணர்த்தியுள்ளது. தியாக தீபம் திலீபனின் சிலையை அவர்கள் எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், அவரைத் எம் மக்களின் நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் அகற்றிவிட முடியாது, எமது திலீபன் கனவு ஒருநாள் நனவாகும் என்கிற நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் நாம் ஒருங்கிணைந்து களமாடுவோம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை இலங்கை போலீஸார் அகற்றி எடுத்து சென்றமை, மத வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் பொலிஸார் தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன்.

உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.

இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன. ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.

உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய போலீஸாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சத்தியராஜ் கண்டனம் .

தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு, நடிகர் சத்தியராஜ், தனது கண்டனத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

12 நாட்கள் உண்மையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழீழத்தின் விடுதலைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் திலீபன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய ஆயுதப் போராளியாக இருந்தபோதிலும், திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்ததாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கூறிய அவர், சிலை அகற்றப்பட்டதன் மூலம் திலீபனின் தியாகம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மேலும் ஆழமாகப் பதியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், திலீபனின் கனவான தமிழீழம் வென்றே தீரும் எனக் குறிப்பிட்ட சத்யராஜ், அதனை நோக்கி அனைவரும் பயணிப்போம் எனவும் குறிப்பிடுகின்றார்.

“வெல்க திலீபனின் தியாகம்” என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

யார் இந்த தியாகதீபன் திலீபன்?

திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராவார்.

இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பிரவேசித்த 1987ம் ஆண்டு காலத்தில், இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த தீலிபன், இறுதியில் போராட்டத்திலேயே உணவின்றி, உயிர் துறந்தார்.

திலீபனின் உயிர் பிரிந்ததை தொடர்ந்து, இந்திய அரசாங்கமே திலீபனை இறக்க செய்ததாக கூறி, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையில் பின்னரான காலத்தில் மோதல் அதிகரிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது.

திலீபனின் உயிரிழப்பின் பின்னர், திலீபனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு லெப்டினன் கேணல் என பட்டம் சுமத்தியது.

ஐந்து அம்சக் கோரிக்கை

01.மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
02.சிறைகளிலுள்ளம், ராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
03.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
04.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
05.தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தனது உயிரை தமிழர்களுக்காக தியாகம் செய்திருந்தார்.

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், வருடாந்த திலீபனை நினைவுகூறும் நிகழ்வுகள் நடாத்தப்படுகின்ற பின்னணியிலேயே, இம்முறை அவரது சிலை அகற்றப்பட்டு சர்ச்சையாக சூழ்நிலை உருவாகியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh