அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

செல்போன் ஆர்டர்; வந்தது சோப்!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலைத் திறந்தபோது செல்போனுக்குப் பதிலாக சோப் கட்டிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் புகாரை உரிய முறையில் கையாளவில்லை எனக் கூறி Flipkart நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த மௌசம் மீனா என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு Flipkart தளத்தில் Realme Narzo 50A செல்போனை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர் ரூ.10,574 செலுத்தியதாக வழக்கு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்த மறுநாளே அவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. செல்போன் வந்துவிட்டதாக நினைத்து பார்சலைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலுக்குள் செல்போனுக்குப் பதிலாக Lifebuoy சோப் கட்டிகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக Flipkart வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார். மின்னஞ்சல் மூலமாகவும் விவரங்களைத் தெரிவித்தார். பார்சலைத் திறந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை. ரிட்டர்ன் கோரிக்கையைச் செயல்படுத்த தேவையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என Flipkart தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பலமுறை புகார் அளித்தும் பணத்தைத் திரும்பப் பெற முடியாத நிலையில் மௌசம் மீனா நுகர்வோர் ஆணையத்தை அணுகினார்.

Flipkart-ன் வாதம்

வழக்கு விசாரணையின்போது, Flipkart ஒரு ஆன்லைன் சந்தைத் தளம் மட்டுமே என்றும், பொருளை விற்பனை செய்தது தனிப்பட்ட விற்பனையாளர் என்றும் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பொருளின் விற்பனை மற்றும் டெலிவரி தொடர்பான பொறுப்பு விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே இருப்பதாகவும் Flipkart தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வாடிக்கையாளர் Flipkart தளத்தின் மூலமாகவே பொருளை ஆர்டர் செய்துள்ள நிலையில், புகார் எழுந்தபோது அதைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிறுவனத்துக்கும் பொறுப்பு இருப்பதாக நுகர்வோர் ஆணையம் கூறியுள்ளது.

நுகர்வோர் ஆணையம் உத்தரவு

வாடிக்கையாளர் பலமுறை புகார் அளித்தும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்பதை ஆணையம் கருத்தில் கொண்டது. இதன் அடிப்படையில், Flipkart நிறுவனத்தின் சேவையில் குறைபாடு இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, மௌசம் மீனாவுக்கு ரூ.10,574 என்ற செல்போன் விலையைத் திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டது. அதோடு, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.5,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்தம் ரூ.20,574 வழங்க வேண்டும். மேலும், ரூ.10,574 தொகைக்கு 7% ஆண்டு வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தத் தவறினால், கூடுதல் வட்டி விதிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது கவனம்

ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வந்தால் உடனடியாக புகார் அளிப்பது மட்டுமின்றி, அதற்கான ஆதாரங்களையும் பாதுகாப்பது முக்கியம்.

குறிப்பாக, பார்சலைத் திறக்கும் வீடியோ, பொருளின் புகைப்படங்கள், ஆர்டர் விவரங்கள், இன்வாய்ஸ், பணம் செலுத்தியதற்கான ஆதாரம், வாடிக்கையாளர் சேவையுடனான உரையாடல்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருப்பது பின்னர் புகார் அல்லது சட்ட நடவடிக்கையின் போது உதவியாக இருக்கும்.

செல்போன் வாங்கிய இடத்தில் சோப் வந்த இந்த சம்பவம், ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருள் கிடைத்தவுடன் அதை சரிபார்ப்பதும், பிரச்சினை ஏற்பட்டால் ஆதாரங்களுடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்