இலங்கையில் அரசியலமைப்பில் 22வது திருத்தத்தை கொண்டு செயற்பாடு தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
உயர்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வூப் பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் இந்த அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேசத்தின் கவனமும் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்த அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 67 மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்றைய தினம் முடிவுக்கு வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைகள் அடங்கிய கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரித்தீ பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான சட்டமூலம் கடந்த மாதம் 07ம் தேதி வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது 67 வயதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 வயதாகவும் உயர்த்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், பிரதம நீதியரசர், தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.
இலங்கையின் பிரதான எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரு தினங்களாக இடம்பெற்றிருந்ததுடன், அதன் விசாரணைகள் நேற்றைய தினம் நிறைவுக்கு வந்தது.
இந்த விசாரணை தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை, சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்கின்றது பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம்
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக முழுமையான நீதியரசர்கள் அடங்கிய குழு நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை கவலையளிப்பதாக பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் ஸ்டுவன் திரு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த மனுக்கள் மீதான விசாரணைகளின் போது மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் முழுமையான நீதியரசர்கள் குழு நியமிக்கப்படாமையானது, இலங்கை வழக்கறிஞர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், சபாநாயகர் உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைகளை சபையின் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.