தமிழை ஆட்சி மற்றும் நீதித்துறையில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், தமிழ் என்று கூறினாலே நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, உயிரோடும் உணர்வோடும் கலந்தது என்றே கருதுகிறோம் என கூறினார். சிறப்பு மிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பணிகளுக்கு தமிழைப் பயன்படுத்தலாம் என சட்டம் அனுமதிக்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்க எளிதாக புரியும் வகையில் இருக்கும் என்பதால், தீர்ப்புகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை என விஜய் கூறினார்.
இதோடு நீதிமன்ற வழங்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தமிழில் மொழிபெயர்க்க சட்டத் தமிழ் பயிற்சி தேவை என்று கூறிய விஜய், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளது போன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். எனவே தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தமிழ முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.