சென்னை: தவெக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் தமிழக பட்ஜெட், நலத்திட்டங்களுடன் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசின் பல முக்கிய நலத்திட்டங்கள் தொடரப்பட்டுள்ள நிலையில், 2026–27 பட்ஜெட்டில் மின்னணு சேவைகள், செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு இந்த ஆண்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு ₹44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2025–26 நிதியாண்டில் திமுக அரசு ₹46,766.68 கோடி ஒதுக்கியிருந்தது. கடந்த ஆண்டைவிட ஒதுக்கீடு சற்று குறைந்திருந்தாலும், வெற்றி மடிக்கணினி திட்டம், தகுதியான மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வகுப்பறைகள், தானியங்கி இயந்திரவியல் கல்வி மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நகர்ப்புற வளர்ச்சிக்கான நிதி இந்த ஆண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு கடந்த ஆண்டின் ₹26,678 கோடியில் இருந்து ₹29,863 கோடியாக ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. இந்த நிதி குடிநீர், சுகாதார வசதிகள், நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சென்னை நீர்வழிகள் சீரமைப்பு போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் துறைக்கு ₹21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் பாதுகாப்பான சாலைகள் இயக்கம் மற்றும் நம்ம சாலை என்ற மின்னணு தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், பராமரிப்பு பணிகளை கண்காணித்தல் மற்றும் நெடுஞ்சாலை நிர்வாகத்தை தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்துவது நோக்கமாக உள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு இந்த ஆண்டில் ₹13,062 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ₹12,965 கோடியை விட சற்று அதிகமாகும். பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதுடன், மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சேவைகளை மேலும் திறன் வாய்ந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ₹1,943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொழில்நுட்ப துணிநூல்கள், விசைத்தறி நவீனமயமாக்கல் மற்றும் கைத்தறி கூட்டுறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் துணிநூல் தொழில்துறை நவீனமயமாக்கல், மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்தி, தொழில்துறை வளாக வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தும் முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறைக்கு ₹1,051 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், இளம் திறமைகளை கண்டறிதல் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குதல் ஆகியவை இந்த ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ₹1,485 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவி தொழில்நுட்பங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் அணுகல் வசதி மற்றும் சுயசார்பு வாழ்க்கையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் பல புதிய நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு’ ₹560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் திட்டத்திற்கு ₹812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறை வாரியான நிதி ஒதுக்கீடுகளைத் தவிர, நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கான மலிவு விலை வீடுகள், விரிவாக்கப்பட்ட மின்னணு ஆளுமை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அரசு சேவைகள், தொழில் முனைவோருக்கு ஆதரவு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் பல்வேறு சீர்திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மொத்தத்தில், திமுக அரசின் 2025–26 பட்ஜெட் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் அதனுடன் செயற்கை நுண்ணறிவு, மின்னணு ஆளுமை, தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், போக்குவரத்து நவீனமயமாக்கல் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றையும் முன்னிறுத்துகிறது. பாரம்பரிய நலத்திட்டங்களையும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்த பட்ஜெட் பார்க்கப்படுகிறது.