புதுடெல்லி: இந்தியாவின் தூய்மையான எரிசக்தி பயணத்தில் முக்கிய மைல்கல்லாக, பிரதமரின் சூரிய வீடு – இலவச மின்சாரத் திட்டம் மூலம் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த சில மாதங்களில் மேற்கூரை சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்படும் வேகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 5.06 லட்சம் புதிய அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரே மாதத்தில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கை இதுவாகும். கடந்த ஒன்பது மாதங்களில் நிறுவும் வேகம் மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
தினசரி சராசரியாக 5,000 அமைப்புகள் நிறுவப்பட்ட நிலையில், தற்போது அது 16,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து வருகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களின் மின் கட்டணச் சுமை குறைந்துள்ளது. அரசின் தகவலின்படி, 19 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்களின் மின் தேவையின் பெரும்பகுதியை மேற்கூரை சூரிய மின்சாரம் மூலம் பூர்த்தி செய்து வருவதால், தற்போது மாதாந்திர மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமின்றி உள்ளன.மேலும், தங்களின் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வலையமைப்பிற்கு விற்பனை செய்து பல குடும்பங்கள் கூடுதல் வருமானமும் ஈட்டி வருகின்றன.
இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உபரி மின்சாரத்தை விற்பனை செய்து மொத்தமாக ₹421 கோடி வருமானம் பெற்றுள்ளன. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக ₹3,500 வருமானம் கிடைக்கிறது.இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை ₹28,024 கோடிக்கும் அதிகமான மானியத் தொகையை மத்திய அரசு நேரடியாக வழங்கியுள்ளது. மின் கட்டணம் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் 4.17 லட்சம் குடும்பங்களுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 4.16 லட்சம் குடும்பங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.இந்த சாதனையுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் சூரிய ஏரிதிட்டத்திற்கும்ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற பொருத்தமான நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய மின் நிலையங்களை அமைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.இந்தத் திட்டத்திற்காக ₹5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 5,000 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையங்கள்அமைக்கப்படவுள்ளன.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மிதக்கும் சூரிய மின் திட்டத்துடனும் மின்சார சேமிப்பு அமைப்புகள் இணைக்கப்படும். இந்த பேட்டரி அமைப்புகள் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மின்சார சேமிப்பை வழங்கும். மொத்தமாக 10,000 மெகாவாட் மணி சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டு, சூரிய ஒளி இல்லாத நேரங்களிலும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய உதவும்.அரசுத் துறையிலும் சூரிய மின்சார பயன்பாட்டை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை நாடு முழுவதும் 1.06 லட்சம் அரசு கட்டிடங்களில் மேற்கூரை சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மின் செலவைக் குறைப்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டையும் அரசுஊக்குவித்தவருகிறது.கிராமப்புறங்களில் பிரதமரின் சூரிய வேளாண் திட்டத்தின் மூலம் சூரிய மின்சார விவசாயத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. 2026–27 ஆம் ஆண்டுக்குள் 34,800 மெகாவாட் சூரிய மின்திறனை உருவாக்கும் இலக்குடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சூரிய மின் பாசன மோட்டார்கள் மற்றும் விவசாய மின் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ₹34,422 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
மேற்கூரை சூரிய மின்சாரத் திட்டத்தில் பொதுமக்கள் எளிதாக இணையும் வகையில் விண்ணப்ப நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் தகவலின்படி, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நெட் மீட்டரிங் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 10 கிலோவாட் வரை திறன் கொண்ட வீட்டு மேற்கூரை சூரிய மின்சார அமைப்புகளுக்கு தானியங்கி தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுவதால், விண்ணப்ப செயல்முறை விரைவாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது.