ஒரு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் வருகைத் தந்த இந்திய வெளியுறவு செயலாளரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜே வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு நோக்கி கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வருகைத் தந்த இந்திய வெளியுறவு செயலாளர், ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், தமிழ் கட்சிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளியுறவு செயலாளருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியின் பின்னர், இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டாலர் மீள்புனர்நிர்மான பொதியின் ஒரு பகுதியான 350 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி தொடர்பான ஒப்பந்தம் மாற்றிக் கொள்ளப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலம் குறிப்பிடுகின்றது.
சூறாவளியின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட புனர்நிர்மானம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்ச்சியாக இலங்கைக்கு செய்துவரும் உதவித் திட்டங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு புனரமைப்புப் பணிகளில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்திய அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் பிராந்திய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்நுட்பம், வலுசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு உட்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும், இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் விடயங்கள் குறித்து, இந்த சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலதிக ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கல்வித் துறையை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் இந்தியக் குழுவினருக்கு விளக்கமளித்தார். இதில், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் தரமான கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
மேலும், இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மாணவர் பரிமாற்றத் திட்டங்களை விரிவுபடுத்துதல், கூட்டு ஆய்வு முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் கல்வியியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அதேவேளை, இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் மற்றும் இலங்கை–இந்தியா மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளிலும் கவனம் செலுத்தினர்.
எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு

இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.
வலயத்தின் முன்னேற்றம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், அபிவிருத்தி மற்றும் இரு நாட்டு மக்களின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்

இந்திய வெளிவிவகார செயலாளருக்கும், இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 2025ம் ஆண்டு இலங்கை விஜயம் மற்றும் இந்திய துணை ஜனாதிபதியின் 2026ம் ஆண்டு இலங்கை விஜயம் ஆகியவற்றின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.
அத்துடன், தித்வா சூறாவளியின் போது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மீள்நிர்மாண பொதியின் கீழான செயற்றிட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்தும் இருதரப்பிற்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பின்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, 2025 ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், 2026 ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள், மேலும் டிட்வா புயலால் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்திய அரசால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான விடயங்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
மேலும், காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணி உரிமை தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியிருந்ததாகத் தெரிவித்த அவர், வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாக காணி வழங்கும் விடயத்தில் சிக்கல் நிலவுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்ததாகவும் கூறினார்.
எனினும், சீரற்ற காலநிலை காரணமாக வட்டவளை, அக்கரகப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் முன்வைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய வெளியுறவு செயலாளருக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை தமிழ் சமூகத்தின் நலனுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினையும், அவர் மீள உறுதிப்படுத்தியிருந்தார். அதிகார பகிர்வு மற்றும் முக்கிய அரசியல் அபிவிருத்திகள் தொடர்பான இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன.