புது தில்லி, ஆக. 5: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதாகவும், ஆளும் தரப்பு விவாதிக்க விரும்பாத கேள்விகளை எழுப்பும்போதெல்லாம் ஒலிபெருக்கிகள் (மைக்) அணைக்கப்படுவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் மேனகா குருசுவாமி புதன்கிழமை குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவதன் மூலம் மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழித்து வருவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:
“இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்னை, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதுதான். மத்திய அரசும் அவைத் தலைவரும் கருத்துகளைத் தணிக்கை செய்கிறார்கள். மக்கள் சார்ந்த பல முக்கியப் பிரச்னைகளை நாங்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறோம்… அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்தும், பிற முக்கிய விவகாரங்கள் குறித்தும் உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என விரும்புகிறோம்.”
நீதிபதிகள் நியமனம்:
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மீதான விவாதத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நீதிபதிகள் நியமனம் தொடர்பான முக்கியப் பிரச்னைகளை விவாதிக்க முயன்றதாகவும், ஆனால் அதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மூத்த வழக்கறிஞருமான மேனகா குருசுவாமி இது குறித்துக் கூறுகையில், “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தும் மசோதா அது. எனவே நீதித்துறை குறித்துப் பேச விரும்பினோம்… பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்கள், பாலினச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினரை நீதிபதிகளாக நியமிப்பதில் உள்ள புறக்கணிப்புகள் குறித்துப் பேசினேன். ஆளும் அரசின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.
உடனே எனது ஒலிபெருக்கி அணைக்கப்பட்டது. இது எவ்வாறு மசோதாவுக்குத் தொடர்பில்லாத பேச்சாகும்? இது நீதித்துறை தொடர்பான மசோதா. நாட்டின் பல்வகைத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை அமைய வேண்டும் என்பதையே வலியுறுத்தினேன்,” என்றார்.
சீரழியும் ஜனநாயக அமைப்புகள்:
மத்திய அரசு ஜனநாயக அமைப்புகளை சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், “உங்களுக்குப் பிடிக்காததை நாங்கள் பேசும்போது ஒலிபெருக்கியை அணைத்துத் தணிக்கை செய்கிறீர்கள். நாங்கள் இந்தியாவின் எதிர்க்கட்சி. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், மக்கள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புவதும் எங்கள் கடமை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாடாளுமன்றம் என்ற உயர்ந்த அமைப்பு சீரழிக்கப்பட்டு வருகிறது,” எனக் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், “உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் இது பதிவாகியுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் மாநில அந்தஸ்து மீட்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை,” என்றார்.
புள்ளிவிவரங்கள்:
முன்னதாக, உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026 மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மேனகா குருசுவாமி, நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் நான்கு உயர்த்துவதால் மட்டும் நீதித்துறையின் கட்டமைப்புச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது எனக் குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் 14 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், 2018 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் பட்டியலினத்தவர் 3 சதவீதம், பழங்குடியினர் 2 சதவீதம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 12 சதவீதம் மட்டுமே என்றும் அவர் புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.
அவரது உரையின்போது, மசோதாவின் வரம்பிற்குள் பேசுமாறு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பலமுறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவரது உரை பாதியிலேயே நிறைவுபெற்றது.