அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழகத்தின் 58 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க உதவும் ரூ.650 பிலாட்டலி பாஸ்போர்ட் – சிறப்புகள் என்ன?

தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பயணத்தின் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், மாநிலத்தின் 58 முக்கிய இடங்களை அடையாளப்படுத்தும் நிரந்தரப் பட அஞ்சல் ரத்து முத்திரைகளைச் சேகரிக்க வழிவகுக்கிறது. ரூ.650 விலையில் கிடைக்கும் இந்தப் புத்தகம், சுற்றுலாவையும் அஞ்சல் தலை சேகரிப்பையும் இணைக்கும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

தமிழகத்தின் பாரம்பரியச் சிறப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இளைய தலைமுறையினரிடையே அஞ்சல் தலை சேகரிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். அக்டோபர் 12ஆம் தேதி சென்னை பொது அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் பி. ராதிகா சக்ரவர்த்தி இந்தப் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. அக்டோபர் 28ஆம் தேதி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஐந்து அஞ்சல் தலைப் பணியகங்களில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.

பிலாட்டலி பாஸ்போர்ட் என்றால் என்ன?

‘Philately’ என்பது அஞ்சல் தலைகளைச் சேகரிப்பதுடன், அவற்றின் வடிவமைப்பு, வரலாறு மற்றும் பின்னணியை ஆராய்வதையும் குறிக்கிறது. இந்த ஆர்வத்தைப் பயண அனுபவத்துடன் இணைக்கும் வகையில் பிலாட்டலி பாஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாகப் பயணங்களின்போது புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களைச் சேகரிப்பது வழக்கம். இந்தப் பாஸ்போர்ட் மூலம் ஒவ்வொரு இடத்திற்கும் உரிய சிறப்பு அஞ்சல் ரத்து முத்திரையைச் சேகரித்து, அந்தப் பயணத்தைப் பதிவு செய்ய முடியும். இதனால் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதுடன் அவற்றின் அஞ்சல் வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இது வெளிநாட்டுப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் அல்ல. மாறாக, அஞ்சல் தலை மற்றும் பட அஞ்சல் ரத்து முத்திரைகளைச் சேகரிப்பதற்காக இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள சிறப்பு நூலாகும்.

58 இடங்கள்; ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான அஞ்சல் அடையாளம்!

இந்தப் பாஸ்போர்ட்டின் முக்கிய அம்சமாக தமிழகத்தின் 58 இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தரப் பட அஞ்சல் ரத்து முத்திரைகள் (Permanent Pictorial Cancellations – PPC) இடம்பெற்றுள்ளன. இவை மாநிலத்தின் வரலாறு, இயற்கை வளம், ஆன்மிகம் மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயில்கள், கோட்டைகள், கலங்கரை விளக்கங்கள், வனவிலங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் இந்த முத்திரைகளில் இடம்பெறுகின்றன. புலிக்காட், முதுமலை மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளின் சிறப்புகளையும் இவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Permanent Pictorial Cancellation என்பது குறிப்பிட்ட அஞ்சலகம் அல்லது இடத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிரந்தரப் பட அஞ்சல் ரத்து முத்திரையாகும். இது கடிதங்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தேதி முத்திரையிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு முத்திரையும் அதனுடன் தொடர்புடைய இடத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

பயணிகள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள தொடர்புடைய அஞ்சலகங்களில் கிடைக்கும் பிரத்யேக முத்திரைகளைச் சேகரிக்கலாம். இவ்வாறு பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் முத்திரைகளை ஒரே புத்தகத்தில் சேகரிப்பதன் மூலம் தங்களது பயண அனுபவங்களைப் பதிவு செய்ய முடியும்.

ரூ.650 விலையில் எங்கு வாங்கலாம்?

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ள இந்தப் பிலாட்டலி பாஸ்போர்ட்டின் விலை ரூ.650 ஆகும். இதனைப் பெறுவதற்காக ஐந்து முக்கிய அஞ்சல் தலைப் பணியகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை – அண்ணா சாலை தலைமை அஞ்சலகம்.

கோயம்புத்தூர் – தலைமை அஞ்சலகம்.
மதுரை – தலைமை அஞ்சலகம்.
திருச்சிராப்பள்ளி – தலைமை அஞ்சலகம்.
புதுச்சேரி – தலைமை அஞ்சலகம்.

இந்த மையங்களில் உள்ள Philatelic Bureau பிரிவுகளை அணுகி, பாஸ்போர்ட்டின் விற்பனை மற்றும் இருப்பு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அறிமுகமான முதல் நாளிலேயே குவிந்த வரவேற்பு!

இந்தப் புதிய முயற்சிக்கு அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மட்டுமின்றி, சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையேயும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூரில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் அதிகாலை 6 மணி முதலே பலர் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர். கர்நாடகம் மற்றும் கேரளாவிலிருந்தும் சிலர் இதனை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

கோயம்புத்தூர் அஞ்சல் கோட்டத்தில் அறிமுகத்திற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட தொலைபேசி விசாரணைகள் வந்துள்ளன. முதல் நாளில் சுமார் 150 புத்தகங்கள் விற்பனையானதுடன், அடுத்த தொகுப்பைப் பெறுவதற்காக 50-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளும் கிடைத்துள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் பிரதிகளை விநியோகிக்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பு!

இந்தியாவில் பிலாட்டலி பாஸ்போர்ட் திட்டம் முதலில் கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்குள்ள முக்கியமான வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முயற்சிக்கு அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் பயண ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக, அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற விற்பனையில் சில மணி நேரங்களுக்குள் சுமார் 8,000 பாஸ்போர்ட்டுகள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதேபோன்ற முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு புதிய கற்றல் அனுபவம்!

இந்தப் பாஸ்போர்ட் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பயனுள்ள முயற்சியாக அமையக்கூடும். தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்கள், கோயில்கள், இயற்கை வளங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் குறித்து புத்தகங்களில் படிக்கும் மாணவர்கள், அவற்றை நேரில் சென்று பார்வையிடுவதற்கான ஆர்வத்தைப் பெறலாம்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள அஞ்சல் முத்திரைகளைச் சேகரிக்கலாம். இதன் மூலம் பயண அனுபவத்துடன் வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

மேலும், டிஜிட்டல் தொடர்புகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு போன்ற பாரம்பரியப் பொழுதுபோக்குகளை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் இந்த முயற்சி உதவக்கூடும்.

சுற்றுலாவையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் முயற்சி!

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்துவமான வரலாறும் கலாச்சார அடையாளங்களும் உள்ளன. பிரபலமான சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, அதிகம் அறிமுகமில்லாத இடங்களையும் தேடிச் சென்று பார்ப்பதற்கான ஆர்வத்தை இந்தப் பாஸ்போர்ட் உருவாக்கும் வாய்ப்புள்ளது.

ஒரு பயணத்தின் நினைவாகப் புகைப்படங்களை மட்டும் வைத்துக்கொள்ளாமல், அந்த இடத்துடன் தொடர்புடைய அஞ்சல் ரத்து முத்திரையையும் சேகரித்துப் பாதுகாக்க முடிவது இதன் தனிச்சிறப்பாகும். இதன் மூலம் சுற்றுலா, வரலாறு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழகத்தின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது அமைகிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sneha Venkatachalam

Sneha Venkatachalam