தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப் பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தத் தடை!
பள்ளிகளில் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஆசிரியர்களே, சில இடங்களில் மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
குறிப்பாக, பள்ளி வளாகத்தைப் பெருக்குவது, வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது, கழிவறைகளைத் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் நரேஷ், 2026 நவம்பர் 17 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எந்தப் பள்ளியிலும் நடைபெறாமல் இருப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை என்ன?
இந்த உத்தரவு திடீரெனப் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இதன் பின்னணியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பும் உள்ளன.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் SHRC 9477/2015 என்ற வழக்கில், 2021 டிசம்பர் 20 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பள்ளிகளில் உள்ள அறைகள் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட WP(MD) எண் 21515/2015 மற்றும் WP(MD) எண் 19179/2023 ஆகிய வழக்குகளில், 2026 ஜூன் 30 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும் தற்போதைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்துவது அவர்களின் நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதிப்பதுடன், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும் என்று இந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெளிச்சத்துக்கு வரும் சம்பவங்கள்!
தமிழ்நாட்டில் மாணவர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.
2025 ஜனவரியில் தருமபுரி மாவட்டம் பெருங்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்யவும், பள்ளி வளாகத்தைப் பெருக்கவும் கட்டாயப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல், 2025 ஜூலையில் புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
2026 ஜனவரியில் கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளிக்கு முன்பாகக் கோலம் போடுவதற்காக இரண்டு மாணவர்கள் சாலையைப் பெருக்க வைத்த சம்பவம் சர்ச்சையானது. இதையடுத்து, பள்ளியின் செயலாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை குறிப்பாணை அனுப்பியது.
தொடர்ந்து, 2026 செப்டம்பரில் கோயம்புத்தூர் அருகே பாலமலை பகுதியில் உள்ள குஞ்சூர்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் மாணவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விசாரணையைத் தொடங்கி, தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டது.
இவ்வாறு வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த சம்பவங்கள், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளன.
பள்ளிகளைச் சுத்தம் செய்யப் பணியாளர்களை நியமிக்க வேண்டியது யார்?
பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளைப் பராமரிப்பது மாணவர்களின் பொறுப்பு அல்ல. அதற்கான தூய்மைப் பணியாளர்களை நியமித்து, முறையான பராமரிப்பை உறுதி செய்வதே பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும்.
இதற்காகவே தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் கழிவறைகளைப் பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
2026-2027 நிதியாண்டில், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களைப் பராமரிப்பதற்காகத் தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் மற்றும் தூய்மைப் பொருட்களுக்காக ரூ.86.94 கோடி ஒதுக்கீடு செய்யத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை 2026 ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்டது.
மேலும், பள்ளிக் கழிவறைகள் தினமும் குறைந்தது இரண்டு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.
கல்வி பெற வேண்டிய இடத்தில் தூய்மைப் பணியா?
பள்ளிகள் என்பவை மாணவர்களுக்கு அறிவையும், சமூகப் பொறுப்பையும், சமத்துவத்தையும் கற்றுக்கொடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும். அங்கு மாணவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்யவோ, பள்ளி வளாகத்தைப் பெருக்கவோ கட்டாயப்படுத்துவது அவர்களின் கல்வி உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது.
குறிப்பாக, தூய்மைப் பணிகள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் தொழில் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, மாணவர்களை இத்தகைய பணிகளில் ஈடுபடுத்துவது கூடுதல் கவனத்துடன் அணுகப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கல்வி கற்பதற்காகவே தவிர, பள்ளியின் தூய்மைப் பணியாளர்களாகச் செயல்படுவதற்காக அல்ல. எனவே, சுற்றறிக்கை வெளியிடுவதுடன் நின்றுவிடாமல், அதன் அமலாக்கத்தையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
மாணவர்களின் கண்ணியத்தையும் கல்வி உரிமையையும் பாதுகாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதே இப்போது எழும் முக்கியமான கேள்வி.