அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரின் விடுதலைக்காக இந்திய பிரதமரை நாடும் இலங்கை தமிழர்கள்

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனின் விடுதலைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையீடு செய்ய வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த கோரிக்கை அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய வளாகத்தில் அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, பேரணியாக சென்ற குழுவினர் இந்த மனுவை இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தில் கையளித்திருந்தனர்.

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி, யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டம்

இதேவேளை, இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக சௌதி அரேபியா அரசாங்கத்தை நாடி, கோரிக்கை முன்வைத்ததன் பின்னரே, இந்திய அரசாங்கத்தினால் தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜா, தமி;ழ் முற்போக்கு கூட்டணி தலைவர் உள்ளிட்ட குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை, அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு, அனோஜன் விவகாரத்துக்கு, ஒட்டு மொத்த இலங்கையர்கள் சார்பில் தீர்வு தேடவே தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என இதன் போது மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத்து மூலமான மனு ஒன்றும் இதன்போது கையளிக்கபட்டது.

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி, மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்

சிவலிங்கம் தொடர்பில் தவறாக பேஸ்புக்கில் பதிவிட்டமைக்கு பதிலளிக்கும் வகையில், நபிகள் நாயகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் பதில் பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே சௌதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்த சிவராசா அனோஜன் அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு முதலில் ஐந்து ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, சிவராசா அனோஜனினால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, நபிகள் நாயகம் தொடர்பில் தவறாக கருத்துரைத்த அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சௌதி அரசாங்கம் சார்பிலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதலில் சைபர் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த தண்டனையானது ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை நிறுத்தி, அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தமது முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன்
சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன்

தொடர்புடைய செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

சௌதியில் இலங்கை இளைஞனுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை, எவ்வாறு மரண தண்டனையானது?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh