அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ஐநா வரை அதிர்ந்த சிறுவர்களை பலியெடுத்த இலங்கை கைக்குண்டுத் தாக்குதல்

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் எழுந்துள்ள நிழலுலக குழுக்களுக்கு இடையிலான மோதல் தொடர்ச்சியாக வலுப் பெற்று வருகின்ற நிலையில், இந்த விடயம் தற்போது சர்வதேச கவனத்தை திருப்பியுள்ளது.

குறிப்பாக கொழும்பு புறநகர் பகுதியாக தெஹிவளை பகுதியில் கடந்த 11ம் தேதி நடாத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்தமை சர்வதேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தெஹிவளை பகுதியில் கடந்த 11ம் தேதி அதிகாலை 3 மணியளவில் முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இந்த கைக்குண்டுத் தாக்குதலில் 17 மற்றும் 11 வயதான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்திருந்ததுடன், சிறுவர்கள் தந்தை படுகாயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் காயமடைந்த தந்தை தொடர்பில் இதுவரை போலீஸ் நிலையங்களில் எந்தவித குற்றச் சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியிருக்கவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த கைக்குண்டுத் தாக்குதலானது தவறுதலாக குறித்த வீட்டை இலக்கு வைத்து நடாத்தப்பட்டிருக்கலாம் என போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்து நடாத்த திட்டமிடப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், இலக்கு மாறுப்பட்ட நிலையில் இந்த நபரின் வீட்டை இலக்கு வைத்து நடாத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி, வேறொரு பிரதேசத்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில் போலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், பிரதான சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் தெஹிவளை பகுதியில் இடம்பெற்றது.

2026ம் ஆண்டு நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை நடாத்தப்பட்ட 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 5 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த கைக்குண்டுத் தாக்குதல்களில் ஒருவர் காயமடைந்து, மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அம்பலாங்கொடை, கல்கிஸ்ஸை, பொரள்ளை, கொஹுவலை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

அம்பலாங்கொடை பகுதியைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளும் கொழும்பு புறநகர் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2025ம் ஆண்டு நடாத்தப்பட்ட 114 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஐநா கண்டனம்

கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியில் நடாத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது.

”தெஹிவளையில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. எந்தவொரு குழந்தையும் இத்தகைய வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்கு பொறுப்பானவர்கள் கண்டிப்பாகப் பதிலளிக்க வேண்டும்.” என இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அன்ட்ரூ பிரெஞ்ச் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh