பேஸ்புக் ஊடாக காதலித்த சிறுமியை தேடி, சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவதற்கு முயற்சித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கடலை அண்மித்த பகுதியிலுள்ள மணல் திட்டொன்றில் நிர்க்கதியான நிலையிலிருந்த சிறுவனை, இலங்கை கடற்படை கடந்த 11ம் தேதி மீட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த சிறுவன் தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட சிறுவனிடம் தலைமன்னார் போலீஸார் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, இந்த சிறுவன் காதலித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், தான் காதலித்த சிறுமியை நேரில் பார்க்கும் ஆவலுடன், இந்த சிறுவன் இராமேஸ்வரத்திலிருந்து படகொன்றின் உதவியுடன் மன்னார் மணல் திட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது தங்க சங்கிலியை படகு ஓட்டுநருக்கு வழங்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், 280 இந்திய ரூபா பணத்துடனேயே இந்த சிறுவன் இராமேஸ்வரத்திலிருந்து வருகைத் தந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராமேஸ்வரத்திலிருந்து குறித்த சிறுவனை அழைத்து வந்த படகு, சிறுவனை மணல் திட்டில் விட்டு விட்டு, அங்கிருந்து சென்றுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை படகொன்று வரும் வரை, சிறுவன் மணல் திட்டில் காத்திருந்த நிலையிலேயே, இலங்கை கடற்படையினர் சிறுவனை மீட்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனின் தாய், இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த சிறுவன் இந்தியர் என போலீஸார் கூறுகின்றனர்.
இந்த சிறுவன் இந்தியாவில் பிறந்துள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவணமும் சிறுவனிடம் இருக்கவில்லை எனவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
தமிழகத்தின் அரவலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவன், மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சிறுவனின் பாட்டி என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மூதாட்டி ஒருவரும் முன்னிலையாகியுள்ளார்.
எனினும், சிறுவனின் பாட்டி என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் இல்லாமையினால், சிறுவனை பாட்டியிடம் ஒப்படைக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும், சிறுவன் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 17ம் தேதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
