இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து, காக்ரோச் ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP) சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி சிவாஜி பூங்காவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்றனர்.

களமிறங்கிய இளைஞர்கள்
CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மும்பை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் போராட்டம் நடைபெற்றது. தேசியக் கொடிகளை ஏந்தியும், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் இளைஞர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தகுதியுள்ள குடிமக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகவும் CJP குற்றம்சாட்டியுள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், SIR நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், 2025ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆதரவு தெரிவித்த திரைத்துறையினர்
இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் நசீருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, இயக்குநர்கள் விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, இசையமைப்பாளர் விஷால் தத்லானி மற்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்குரிமையைப் பாதுகாப்பது மற்றும் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாகப் போராட்டக்காரர்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அக்டோபர் 10 டெல்லியில் போராட்டம்
மும்பைப் போராட்டத்தைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால், அக்டோபர் 10ம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள் டெல்லிக்குத் திரண்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Delhi Police drags citizens on the streets of the capital!
— Neha (@neha_aisa) October 2, 2026
History will remember you Delhi Police and whose side you were on, who you were trying to save and who you attacked! pic.twitter.com/nxudsUnvn4
டெல்லி காவல்துறை போராட்டத்தைத் தடுக்க முயன்றால், அவர்கள் எங்கு தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த இடமே தங்களுக்கான ஜந்தர் மந்தராக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இதில் இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கைது செய்ததாகக் கூறப்படும் சம்பவங்களையும் CJP தலைவர்கள் சுட்டிக்காட்டினர். போராட்டம் தடுக்கப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையம் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ளவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், CJP அறிவித்துள்ள அடுத்தகட்டப் போராட்டம், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.