நீட் வினாத்தாள் கசிவுவை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களைச் சமாளிக்க தனி மசோதா, உயர்மட்டக்குழு அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
மருத்துவராகும் கனவுடன் நாடுமுழுவதிலும் பலரும் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். வசதி படைத்தவர்கள் தனியார் ‘டியூசன்’ சென்டர்களின் லட்சணக்கணத்தில் பணத்தை செலவழித்து எளிதாக தேர்ச்சி பெறும் நிலையில், கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் சவாலானதாக இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
வசதி படைத்தவர்களுக்கான தேர்வாக நீட் மாறிவரும் சூழலில் அவ்வப்போது அந்தத் தேர்வு தொடர்பான குளறுபடிகள், மோசடிகள் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்து லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை இழக்கச் செய்து வருகிறது. ஒவ்வொரு முறை நீட் தேர்வு முடிவு வெளியாகும் போதும் மாணவர்கள் தற்கொலைகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவும்; CJPயின் மாபெரும் போராட்டமும்…
இப்படியான சூழலில் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு, 21 மாணவர்கள் நாடு முழுவதிலும் தற்கொலை செய்து கொண்டனர். 2024ம் ஆண்டிற்குப்பிறகு நடந்த இந்தக்கசிவு விவகாரம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இளைஞர்களை சோம்பேறி, ‘கரப்பான்பூச்சி’ எனக்கூறியபோது, இளைஞர்கள் துவங்கிய ‘கரப்பான் பூச்சி ஜனதா’ கட்சி நீட் விவகாரத்தை கையில் எடுத்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு என கல்வித்துறையில் நடந்துள்ள மோசடி, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் இறுதி முதல், CJP கட்சியினர் அமைதியான முறையில் போராட்டமும் நடத்தி வந்தனர்.
இப்படியான நிலையில், ஜூன் 28ம் தேதி அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டத்தை (பட்டினிப் போராட்டம்) துவங்கினார்.
வாங்சுங் 21ம் நாளில் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட நிலையில், அபிஜித் தீப்கே தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் நடந்தது.

இதில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றதுடன், சென்னை, மும்பை, பீகார் என நாடு முழுவதிலும் இப்போராட்டத்திற்கு ஆதரவும் அதிகரித்தது.
டெல்லியில் ஜூலை 20-ம் தேதி (சலோ சன்சாத்) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப்பேரணி நடத்த CJPயினர் திட்டமிட்ட நிலையில், டெல்லி போலீஸார் அதற்கு அனுமதியளிக்க மறுத்ததுடன், பேரணியில் சென்றவர்களை மிகக்கொடூரமாகத் தாக்கினர். லத்தியில் அடிப்பது, கண்ணீர் புகைக்குண்டு வீசுவது, பெயர் அட்டையை மறைத்து வைத்து மாணவர்களை கொடூரமாகத் தாக்குவது என, பாஜக ஆதரவுடன் அரச வன்முறையை கட்டவிழ்த்தனர் டெல்லி போலீஸார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா
பாஜகவிற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் களமிறங்கி, CJPக்கு ஆதரவளித்ததால், போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையும் கேள்வி எழுப்பியதால் பாஜக அரசிற்கு அழுத்தம் அதிகரித்தது.
இதன் காரணமாக வேறுவழியின்றி, நேற்று முன்தினம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, மத்திய உணவுத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இருப்பினும் சென்னை, மும்பை என நாட்டில் பல பகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர்கள் அமைப்புகள் ‘முழுமையான நீட் தேர்வு ரத்து வேண்டும்’ எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் விவகாரத்தில் சர்வதேச அளவில் கடும் நெருக்கடி, நாட்டினுள் அவப்பெயரை சந்தித்துவிட்டது ஆளும் பாஜக அரசு. இதனைச் சமாளிக்கவும், மேலும் வேறு போராட்டங்களை வலுப்பெறுவதைத் தடுக்க, தற்போது புதிய யுக்திகளை கையில் எடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
‘தேர்வு முறையை சீர்திருத்த உயர்மட்டக்குழு’: பிரதமர் மோடி
நீட் விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிரம் மற்றும் எக்ஸ் தள பக்கத்தில் ஜூலை 26ம் தேதி (நேற்று) பேசிய பிரதமர் மோடி, ‘நீட் தேர்வை முறையாக நடத்த தேர்வு முறையை சீர்திருத்தும் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மோசடி, வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க UIDAI தலைவர் நந்தன் நிலேகனி இந்தக்குழுவின் தலைமை வகிப்பார்.
HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
மேலும், சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சோமநாத், முன்னாள் ஐபி இயக்குநர் தபன் தேகா போன்ற பல வல்லுநர்கள் இதில் இருப்பார்கள். யக்குநரர் இ இந்த அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்த, High Powered Task Forceஆக இருந்து நீட் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து தேர்வுகளை மறுசீரமைத்து, முறையாக கண்காணித்து தவறுகளை நிச்சயம் தடுக்கும். ஏற்கனவே வினாத்தாள் கசிவை விசாரிக்க பாஜக தனி நீதிமன்றம் – fast-track courts அமைத்து விசாரணையை விரைவுபடுத்தியுள்ளது. மாணவர்களின் நலன் காக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது,’’ எனக்கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரத்தியேக மசோதா!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல்வாரம் அமளியில் முடிந்திருக்கும் நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது. இந்நிலையில், இன்று Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill 2026 – மசோதாவை தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்கள் என இதுவரையில் எந்தத்தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் டெல்லி போலீஸார், மத்திய அரசின் அத்துமீறல்களை குறிவைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘நீட் தேர்வு ரத்து’ என்ற கோரிக்கையை வலுவிழக்கச் செய்யவும், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் களமிறங்குவதைத் தடுக்கவும், பிரதமர் மோடி அறிவித்துள்ள High Powered Task Force, பிரத்தியேக மசோதா உத்திகள் அவர்களுக்கு அரசியல் ரீதியில் பலன்கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.