அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

எல்-நினோவினால் வருட இறுதியில் கடும் வெள்ள அபாயம் – தயாராகும் இலங்கை அரசாங்கம்

இலங்கையை எல்-நினோ தற்போது தாக்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவிக்கின்றார்.

எல்-நினோவின் தாக்கம் இலங்கையில் சுமார் ஒரு வருட காலம் வரை இருக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் கடும் வெப்பம் நிலவக்கூடும் என்பதுடன், மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பம் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாக்கம் ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணக்கூடும் எனவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கடும் வெப்பம் ஏற்படுகின்றதை போன்றே, கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியங்களும் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டிய அவர், வெள்ளப் பெருக்கு அபாயங்களும் காணப்படுகின்றன என குறிப்பிடுகின்றார்.

ஜுலை மாதம் இறுதி வாரத்திலும் ஆகஸ்ட் மாதம் முதல் காலப் பகுதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை அதிகரித்து ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை வீழ்ச்சி இல்லாத நிலைமை தோன்றுவதுடன், அதிக வெப்ப நிலைமை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவு – நாவலபிட்டி பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இவ்வாறான பின்னணயில், எல் – நினோவினால், இலங்கை எதிர்கொள்ளக்கூடிய நிலைமை குறித்து பொதுமக்களை தெளிவுட்டும் வகையிலான செய்தியாளர் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே கருத்து தெரிவித்தார்.

”எமக்கு வரட்சி நிலைமை ஏற்படக்கூடும். அதேபோன்று, கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும். இந்;த இரண்டு நிலைமைகளையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை வழமைக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. டிசம்பர் மாதத்தில் எடுத்துக்கொண்டால், கடந்த வருடம் நினைவில் இருக்கும் தித்வா சூறாவளி வந்தது. கடல் பிராந்தியங்களில் வளிமண்டல குழப்ப நிலைமை ஏற்படும். தொடர்ச்சியாக சில தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் சாத்தியம் உள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயங்களும் நிலவுகின்றன” என அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற மழையுடனான வானிலை காரணமாக, நெல் அறுவடையை அதற்கு முன்னராக காலத்தில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, வரட்சி மற்றும் கடும் வெள்ளப் பெருக்கு நிலைமைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

”நீரை நிரப்பியுள்ள நீர் பவுசர்கள், நீர் தாங்கிகள் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் உள்ள அனைத்து பொருட்களையும் மாவட்ட ரீதியிலுள்ள தமது அலுவலகங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. குடி நீர் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதனை எதிர்கொள்வதற்காக மாவட்ட ரீதியிலுள்ள எமது அதிகாரிகளை நாங்கள் தெளிவூட்டியுள்ளோம். திடீரென வெள்ளப் பெருக்கு நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில், அதற்காக முப்படையினர், போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று வெள்ளப் பெருக்கை எதிர்கொள்வதற்காக எமது வசமுள்ள பொருட்களையும் தயார்ப்படுத்தி வைத்துள்ளோம்.”” என பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க பட்டபெதி தெரிவிக்கின்றார்.

”குறிப்பாக இந்த நிலைமையின் கீழ் தொழில் இழப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவ்வாறான நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என அவர் குறிப்பிடுகின்றார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh