மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் ஆய்வு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீர் குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு அரசும் ஒரு குழுவை அனுப்பி மேகதாது திட்டப் பகுதியை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிவக்குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழக எல்லையில் இருந்து சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவிலேயே மேகதாது அணை அமைய உள்ளதாகவும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். மத்திய குழு அந்தப் பகுதியை ஆய்வு செய்து, மேகதாது நீரை பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது என்பதை புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதோடு விரைவில் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்க கோரிக்கையையும் கர்நாடக முதல்வர் முன்வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்:
கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ள கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வரின் கருத்துக்கு தமிழக அரசு, இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என விமர்சித்த எடப்பாடி, கர்நாடகத்துடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்கு தவெக அரசு துணை போகிறதா? என்ற கேள்வியை மக்களிடையே எழுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு அனுமதி கோரி கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் “கர்நாடக முதல்வரைப் பார்த்து விஜய்க்கு பயமா?” என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் திறப்பு விவகாரத்திலும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுப்பதிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். “தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை; அணை கட்ட தடுப்பதற்கும் வாய் திறக்கவில்லை” என தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல்:
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ள கருத்திற்கு எவ்வித பதிலையும் தமிழக முதல்வர் விஜய் தெரிவிக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.