இலங்கையின் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, இந்தியாவின் முக்கிய தலைமைகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் வைத்து நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்துள்ளதை நினைவு கூர்ந்து இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடாத்தியதுடன், எதிர்வரும் காலங்களிலும் தமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக ஒரு நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் விரிவாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளன.
நாடு எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கான தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் மக்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்காக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக செலுத்தி வரும் கவனம் குறித்தும் இதன்போது கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய பொதுவான நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையில் இந்திய முதலீடுகளுக்குக் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
டெல்லி முதலமைச்சருடன் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
டெல்லி மாநில அரசு தற்போதைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலனுக்காகவும், டெல்லி நகரின் அபிவிருத்திக்காகவும் முன்னெடுத்து வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.
குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மின்சார பேருந்துத் திட்டங்கள், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் மற்றும் மின்னேற்ற வசதிகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. டெல்லி மாநில அரசு மின்சார பேருந்து போக்குவரத்து முறையை விரிவுபடுத்தி வருவதுடன், 2026ஆம் ஆண்டில் பெருமளவிலான மின்சார பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பெண்களின் நலன், பொருளாதார வலுவூட்டல் மற்றும் சுயாதீனத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குழந்தைகள் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநில அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நலன்புரித் திட்டங்கள் தொடர்பாகவும் டில்வின் சில்வா கருத்துகளைத் தெரிவித்தார்.
குறிப்பாக, நாடு முழுவதும் நிலையான சுற்றுச்சூழல் தூய்மையை ஏற்படுத்துவதற்கும் மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்கள், மக்கள் நலன் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்த அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான முக்கிய சந்தர்ப்பமாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.