கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் விஜய்யை காண்பதற்காக மக்கள் பலர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என பலர் உயிரிழ்ந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ன நடந்தது? ஏன் இத்தனை நபர்கள் உயிரிழ்ந்தார்கள்? என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கையாக அரசு பணியை கடந்த ஜுலை மாதம் வழங்கியது.
அரசு பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி அரசுப்பணியை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த அரசுப்பணி நியமனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் கரூரில் உயிரிழ்ந்த குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டது. பட்டாசு ஆலை விபத்தில் எத்தனையோ நபர்கள்? உயிரிழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் வேலை வழங்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியதோடு அரசுப் பணிகளை விதிமுறைகளைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் எப்படி வழங்க முடியும். ஏற்கெனவே கருணை அடிப்படையிலான வேலைக்காகக் காத்திருப்பவர்களின் உரிமையைப் பாதிக்கலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டதோடு அரசுப்பணி வழங்க தடை விதித்தும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தை நாடிய அரசு.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசுப் பணி வழங்கிய முடிவு மனிதாபிமான அடிப்படையிலான அரசின் கொள்கை முடிவு என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகால வாழ்வாதாரம் வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அரசு தரப்பு வாதிட்டது. இதோடு பணி நியமனம் பெற்றவர்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன், கரூர் சம்பவம் ஒரு துயரமான நிகழ்வு என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதில் என்ன பிரச்சினை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வழங்கும் அரசின் கொள்கையை கேள்விக்குள்ளாக்குவது தொடர்பாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனு தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.