தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சார்பில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாநிலம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உற்பத்தித்துறை, மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பிரிவுகளில் புதிய திட்டங்கள் அமையவுள்ளன. குறிப்பாக ரூபாய் 67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
முதலீடு செய்யும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள்:
தவெக அரசு பொறுப்பேற்று நடத்திய முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பல முன்னணி சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக அவிட் குரூப் ரூ 7 ஆயிரம் கோடியில் முதலீடு செய்துள்ளது. இதே போன்று காஞ்சிபுரத்தில் ஜே.கே. டயர் புதிய ஆலை உட்பட ரூ.5,143 கோடி முதலீடும், டெய்ம்லர் காஞ்சிபுரத்தில் ரூ 4ஆயிரம் கோடி, லூகாஸ் டிவிஎஸ் ரூ 2 ஆயிரம் கோடி, டைட்டன் ஓசூரில் ரூ.ஆயிரம் கோடி மற்றும் பிட்சர் ரூ. 300 கோடிக்கு முதலீடு செய்துள்ளது.
இதே போன்று அமெரிக்காவின் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் மற்றும் பிரான்ஸின் செயின்ட் கோபைன் ஆகிய முன்னணி உலகளாவிய நிறுவனங்களும் பெரிய அளவிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.