ஏவுகணை தாக்குதலில் மூலம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய, காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொட, விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினராக இருந்த முரளி என்ற நபர், நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியுள்ளார்.
கொழும்பு மூவரடங்கிய நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (ஆக்.16) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே இந்த சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போதே இந்த சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் சாட்சியம் வழங்குவதற்காக தற்போது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு பிரிவின் முன்னாள்; புலனாய்வு பிரதானி சுரேஷ் சலேவும் நேற்றைய வழக்கு விசாரணைகளின் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் முரளியிடம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கேள்விகளை கேட்டுள்ளார்.

வழக்கறிஞர் :- நீங்கள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுடன் சகோதரரை போன்று நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்தீர்கள் அல்லவா?
முரளி :- ஆம்.
வழக்கறிஞர் :- இந்த நட்பு தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கூறியிருந்தீர்களா?
முரளி :- இல்லை. நான் அது தொடர்பில் அவரிடம் கூறவில்லை.
வழக்கறிஞர் :- எக்னெலிகொடவுடனான தொடர்பு குறித்து, தமிழ்ச் செல்வன் என்ற பயங்கரவாதியிடம் கூறியிருந்தீர்களா?
முரளி :- ஆம்.
வழக்கறிஞர் :- இந்த தொடர்பு குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் அப்போதைய புலனாய்வு பிரிவின் இரண்டாம் நிலை பிரதானியான ஞானவேல்லிடம் கூறியிருந்தீர்களா?
முரளி :- ஆம்.
வழக்கறிஞர் :- எக்னெலிகொடவுடனான தொடர்பு குறித்து பொட்டு அம்மானிடம் கூறியிருந்தீர்களா?
முரளி :- ஆம்.
வழக்கறிஞர் :- அரசத் தலைவரை ஏவுகணை தாக்குதலில் மூலம் கொலை செய்ய வேண்டும் என எக்னெலிகொட உங்களிடம் கூறியதன் பின்னரா? அல்லது முன்பா? பொட்டு அம்மானிடம் இந்த விடயத்தை கூறியிருந்தீர்கள்?
முரளி :- அதற்கு முன்னரே நான் கூறியிருந்தேன்.
வழக்கறிஞர் :- ஏவுகணை தாக்குதலை நடாத்தி அரசத் தலைவரை கொலை செய்ய வேண்டும் என ஹபரணை பகுதியில் வைத்து கலந்துரையாடும் போது, நாட்டின் அப்போதைய அரசத் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அல்லவா?
முரளி :- ஆம்
வழக்கறிஞர் :- பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர் அல்லவா?
முரளி :- ஆம்
வழக்கறிஞர் :- எனினும், எக்னெலிகொட இறுதியாக கதைத்த தினத்தில், காலை, பகல் மற்றும் இரவு என மூன்று தடவைகள் பேசியிருந்தார் அல்லவா?
முரளி :- ஆம். இறுதி நாளில் நான் பேசினேன்
வழக்கறிஞர் :-நீங்கள் முகாமில் இருக்கும் போது, பொருட்களுடன் வந்த பத்திரிகை ஒன்றை பார்த்து அல்லவா, எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான தகவலை நீங்கள் அறிந்துக் கொண்டீர்கள்?
முரளி :- ஆம்.
இந்த கேள்விகளை தொடர்ந்து, அரச தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிஷ்டர் ஜெனரல் வசந்த பெரேரா, முரளியிடம் கேள்விகளை கேட்டிருந்தார்.
எக்னெலிகொட உங்களிடம் என்ன சொல்லியிருந்தார் என்பதை தெளிவுப்படுத்த முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
முரளி :- நானும், நாதன் என்ற நபரும் எக்னெலிகொடவுடன் பேசியிருந்தோம். போர் முடிவடைந்தாலும், பிரச்சினை முடிவடையாது என அவர் கூறியிருந்தார். இன்று நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியும் என அவர் கூறியிருந்தார். அது எப்படி என்று நாங்கள் கேட்டிருந்தோம். ஜனாதிபதி, அமைச்சர்கள் என அனைவரும் ஒரு விமானத்தில் பயணிக்கும்போது ஏவுகணை தாக்குதலை நடாத்தி, அவர்களை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் :- நீங்கள் அந்த தகவலை எவ்வாறான விதத்தில் எடுத்துக்கொண்டீர்கள்?
முரளி :- ஒரு உதாரணமாகவே அவர் அதனை கூறியிருந்தார். அவர் பேசி விதம் தான் அது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு பிரிவின் முன்னாள் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவிடம் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வசந்த பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் :- அரச புலனாய்வு பிரிவின் தகவல்களையும், தரவுகளையும், ஆவணங்களையும் வழங்குவது எவ்வாறு?
சுரேஷ் சலே :- பதிவு தபால், தொலைபேசி மற்றும் ஆவணங்கள் அனைத்திற்கும் அதிகாரிகள் இருக்கின்றார்கள். குறிப்பாக தொலைபேசியில் கூறும் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்படும். மற்றையது பொதுவாக ஏனைய பிரிவுகளுக்கு வழங்கப்படும். தொலைபேசிக்காக வேறொரு அதிகாரி இருக்கின்றார். அதற்கு பணிப்பாளர் ஒருவர் தொடர்புப்பட மாட்டார்.
இந்த இடத்தில் கடிதமொன்றை காண்பித்து, இந்த ஆவணம் புலனாய்வு பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவா வழங்கப்பட்டிருந்தது?
அதற்கு பதிலளித்த சுரேஷ் சலே, இது புலனாய்வு பணிப்பாளரின் பரிந்துரையுடன் இருக்காது. இவ்வாறு ஆவணங்களை நாங்கள் வழங்க மாட்டோம். நாங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிடும் முறையொன்று உள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுரேஷ் சலே மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.
”30 வருட காலமாக நான் பொறுப்பாக கடமைகளை செய்திருந்தேன். மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியிருந்தேன். எனினும், நல்லதை கேட்டதில்லை. புலனாய்வு அதிகாரிகளை தயார்ப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக விடயம். மிகவும் கவலையாக உள்ளது.”
இதையடுத்து, விடயங்களை ஆராயந்த நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைகளை அக்டோபர் மாதம் 22ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளது.