அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையின் பாதுகாப்பு 38 வருடங்களின் பின்னர் இந்தியா வசமானதா?

சுதந்திர இலங்கை வரலாற்றில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்களாக பணியாற்றிய இருவரே இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.

ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இடம்பிடித்த கே.சி.பந்த், 1988ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர், 38 வருடங்களின் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையிலுள்ள ராஜ்நாத் சிங் வருகைத் தந்திருந்தார்.

1988ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இந்திய அமைதிப்படைக்கும் இடையில் போர் நிலவிய தருணத்திலேயே, அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த இந்திய அமைதிப்படை, கொழும்பின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றிருந்ததோடு, வடக்கு – கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டிருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அமிர்தநாயகம் நிக்ஸன் தெரிவிக்கின்றார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட காலப் பகுதி அது.

ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன

மாகாண சபைகள் பிரிக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தல் முதலில் நடாத்த திட்டமிடப்பட்ட காலப் பகுதி அது.

இவ்வாறான தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்திருந்த தருணத்திலேயே, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த், இலங்கையை நோக்கி விரைந்திருந்தார்.

இந்திய ராணுவம் களத்தில் இருந்த தருணத்தில், அதன் போர்த் தந்திரோபாயங்கள், இலங்கையுடனான ராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் நேரடியாகவே ஆராயும் நோக்கத்துடனேயே அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

அன்று இலங்கைக்குள் நடந்த அமைதியற்ற சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகைத் தந்த நிலையில், 38 வருடங்களின் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் வருகைத் தந்தமைக்கான காரணம் என்னவென்பது பலரது கேள்வியாக இருக்கின்றது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த தருணம்

இலங்கையுடன் 3 உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என கூறினாலும், அதையும் தாண்டி பல்வேறு பாதுகாப்பு சார்ந்த காரணங்கள் இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ராஜ்நாத் சிங்கின் விஜயத்தின் பின்னணியில் ஆழமான புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு பின்னணிகள் காணப்படுகின்றன என்கின்றார் மூத்த பத்திரிகையாளர் அமிர்தநாயகம் நிக்ஸன்.

1988ம் ஆண்டு அன்றைய விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நோக்கிய பயணமாகவும், இன்று சீனாவிற்கு எதிரான ராணுவ ரீதியான உத்திகளை வகுக்கும் திட்டத்துடனும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தில் ஒரு அங்கமாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

அத்துடன், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இந்தியாவின் மூலோபாய கூட்டணியை பலப்படுத்தும் ஒரு முக்கிய புவிசார் அரசியல் நகர்வு என்றும் இந்த விஜயத்தை விவகரிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் பிரதான இலக்கு என இந்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2025ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ”பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்” தற்போதைய செயல்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான கூட்டு முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்” கொள்கை மற்றும் ‘மகாசாகர்” தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் கீழ் இலங்கையைத் தம் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் இந்தியப் புவிசார் அரசியல் நகர்வு என பல்வேறு ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஜெனிவாவில்; ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த வருகை நேரடியாக போர்க்குற்ற விசாரணைகளுடன் தொடர்புடையது என ஈழத்தமிழர்கள் எவரும் கற்பனை செய்யக் கூடாது என மூத்த பத்திரிகையாளர் அமிர்தநாயகம் நிக்ஸன் தெரிவிக்கின்றார்.

புவிசார் அரசியல் ரீதியாக இதற்கு ஒரு பின்னணி உள்ளது. அதாவது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வரும்போது, இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவையோ அல்லது சமநிலையையோ எதிர்பார்ப்பது வழமை எனவும் அவர் கூறுகின்றார்.

ஆனால், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் முற்று முழுதாக இராணுவ, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை சார்ந்த எல்லைகளுக்குள்ளேயே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, இந்த இருதரப்பு பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணைகள் நேரடியாக விவாதப் பொருளாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மூத்த பத்திரிகையாளர் அமிர்தநாயகம் நிக்ஸன் தெரிவிக்கின்றார்.

அதேநேரம், இந்த பயணத்தால் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு உடனடி நெருக்கடிகள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், மாறாக இது ஒரு சாதகமான சூழலை இலங்கைக்கு உருவாக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இடதுசாரி சார்புடையதாகக் காண்பிக்கும் அநுர தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற போது, சீனா பக்கம் அதிகம் சாய்ந்துவிடுமோ என்ற கவலை இந்திய அரசிற்கு இருந்ததமை உண்மை.

ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ராஜ்நாத் சிங் நேரில் சந்திப்பது, இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான மற்றும் நம்பகமான உறவு தொடர்வதைக் காட்டுகிறது என அவர் கூறுகின்றார்

2022ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளைத் தொடர்ந்து, தற்போது பாதுகாப்புத் துறையிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு நீடிப்பது பிராந்திய ரீதியாக இலங்கை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சர்வதேச அளவில் வலுப்படுத்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆகவே, ஈழத்தமிழ் மக்களின் கூட்டுரிமையை ஒருமித்த குரலில், உறுதியாக வலியுறுத்தக்கூடிய பலமான அரசியல் தலைமை உருவாகும் வரை, அமெரிக்கா – இந்தியா போன்ற வல்லரசுகள், தங்களின் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்கனவே இத்தகைய அணுகுமுறைகளைக் கையாளும் என அவர் குறிப்பிடுகின்றார்.

2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த 17 ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தீர்க்கமாகச் சிந்திக்கத் தவறிவிட்டன. மாறாக, கொழும்புக்கு வந்து செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்ற உயர் மட்ட இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, மன்னார் கடலில் பெட்ரோலிய அகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறான பாதகங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைக்கான புதிய தூதுவர்களை நியமித்துள்ள பின்னணியில், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜே, இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை இலங்கையில் நிறைவு செய்யவுள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களுக்கு சவால் கொடுக்கும் வகையிலான உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கள நிலவரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எது எவ்வாறாக இருந்தால், சுதந்திர இலங்கை வரலாற்றில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் முதல் முதலில் 1988ம் ஆண்டு வருகைத் தந்திருந்தார். அது இலங்கையின் தீர்மானமிக்க தருணமாக கருதப்படும் ஆண்டுகளில் பிரதானமான ஆண்டாகும். அவ்வாறான பின்னணியில், 38 வருடங்களின் பின்னர் தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் வருகைத் தந்தமை, இந்து பெருங்கடல் சார்ந்த சவால் மிக்க தருணமாக கருதப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1988ம் ஆண்டு இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டதை போன்றே, தற்போதும் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்வி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயத்தின் ஊடாக எழுப்பப்படுகின்றது?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh