இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பஸன் அமரசேன இன்று போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமா மற்றும் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் இரட்டை சகோதரிகள் ஆகியோரின் வழக்கொன்றின் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையாளர்களான இருந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கிலிருந்து விடுப்படுவதற்காக அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற போது, நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலையாகாததை அடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் முனனாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன, அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த மே மாதம் 12ம் தேதி கோட்டை நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, அரவிந்த டி சில்வா சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.