தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விமல். தன்னுடைய காமெடி கலந்த யாதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடி கலந்த காதல் திரைப்படமான களவானி விமலுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்தார். நடிகராக வலம் வந்த விமல் கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னர் வகையறா படத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். பொன்வண்ணன், நடிகை சரண்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படத்தை இயக்குவதற்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ரூபாய் 4.5 கோடி கடனாகப் பெற்றுள்ளார். திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளாகியும் பைனான்சியரிடம் வாங்கி தொகையைத் திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நடிகர் விமல், பைனான்சியரிடம் வாங்கிய தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். இதை வங்கியில் செலுத்தி பணம் பெற முயற்சிக்கும் போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. பின்னர் ரூபாய் 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது பைனான்சியர் கோபி சென்னையில் உள்ள 11 வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பல நாட்களாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைக்கு நீதிபதி ஆர்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், நடிகர் விமலுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு நிரூபிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக விமலுக்கு கால அவகாசம் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.