அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

3000 தமிழர்களை கொன்ற கறுப்பு ஜுலைக்கு 43 வருடங்கள்

இலங்கையில் சுமார் 3000திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை இடம்பெற்று இன்றுடன் 43 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கறுப்பு ஜூலையில் உயிர்நீத்த தமிழர்களை நினைவுக்கூரும் நிகழ்வொன்று, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வன்முறை சம்பவத்தில் உயிர்நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

”ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.” என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவிக்கின்றார்.

”அனைத்து தேசிய இன மக்களுக்கும் சமவுரிமை கிடைக்கும் அரசியல் தீர்வுக்காக போராடுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் நேற்று மாலை துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு பாடல்கள் ஒலிக்கப்பட்டு, கையெழுத்து வேட்டை இடம்பெற்றிருந்தது.

கொழும்பு – புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் சமவுரிமைக்கான அமைப்பினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வார காலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகளை நோக்கலாம்.

கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்?

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.

கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு – பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய் கருத்துக்கள் வெளியாகி நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தினால் சுமார் 3000 தமிழர்கள் வெட்டி, எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.

இலங்கையில் தமது சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

பஸ்களின் வருகைத் தந்த பலர், தமது ஊரை தீக்கிரையாக்கியதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரத்தினபுரியை சேர்ந்த பெண்ணான எஸ்.கமலாஷினி தெரிவிக்கின்றார்.

‘நிறைய பஸ்கள்ள நிறைய பேர் வந்தாங்க. கத்தி, அரிவாள் ஆயுதங்கள எடுத்துகிட்டு வந்து, ஊரையே சேதப்படுத்தினாங்க. நெருப்பு வச்சாங்க. எங்கட வீட்ட உடைக்க அவங்க வந்த போது, பக்கத்து வீட்டுல இருந்த சிங்கள மக்களே எங்களையும் காப்பாத்தினாங்க. நிறைய பேர் காடுகளுக்குள்ள ஓடி ஒழிஞ்சிகிட்டாங்க” என எஸ்.கமலாஷினி தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh