இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் மீன் வளங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக இலங்கை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிலிருந்து சுமார் 75 சதவீதமான மீன்கள் பிடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கரையோர பகுதிகளில் குறிப்பாக ஒரு நாள் மீன்பிடி நடவடிக்கைகள் 40 வீதமாக இருக்கின்ற நிலையில், ஆழ்கடல் மீன்பிடியானது 35 வீதமாக காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, கரையோரங்களில் அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளமையினால், மீன்களின் தொகை படிப்படியாக குறைவடைந்துள்ளது என அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், தற்போது இலங்கையை சூழவுள்ள கடலில் மீன்கள் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாரா நிறுவனம்
இந்த நிலைமையானது தொடரும் பட்சத்தில், எதிர்வரும் சில ஆண்டுகளில் கரையோர மீன்கள் முற்றாக அழிவடைந்து விடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
”இவ்வாறு கரையோரங்களில் அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு, அந்த மீன்கள் குறைவடையும் போது, மீன்களை அதிகளவில் பிடிப்பதற்காக மீனவர்கள் தவறான, சூழலுக்கு உகந்ததல்லாத மீன்பிடி முறைகளை பின்பற்றுவார்கள். முன்னர் வலையின் கண்கள் பெரிதாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சின்ன மீன்கள் தப்பி விடும். பெரிய மீன்கள் பிடிப்படும். இப்போது வலைகளின் கண்களும் சிறிதாகின்றது. தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. டைனமைட் பயன்படுத்தி மீன்களை பிடிக்கின்றார்கள். பாதுகாக்கப்பட்ட வலயங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பவள பாறைகள் சேதமாக்கப்படுகின்றமையினால், மீன்களின் உற்பத்திகளும் குறைவடைகின்றன.”” என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்து சமுத்திரத்தின் வெப்பத்தன்மை அதிகரிப்பதும் மீன்கள் குறைய காரணம்.
இந்து சமுத்திரத்தை அண்மித்து அதிகளவிலான நிலப்பரப்புக்கள் காணப்படுகின்றமையினால், கடல் வெப்பமாகும் தன்மை அதிகரித்துள்ளமையும், மீன்களின் உற்பத்தி வெகுவாக குறைவடைய காரணம் என இலங்கை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.
இந்து சமுத்திரத்தின் வடப் பகுதி ஆசிய கண்டனத்தின் நிலப் பரப்பினால் தடைப்பட்டுள்ளதாக கூறிய அவர், அந்த காரணத்தினால் இலங்கையை சூழவுள்ள கடல் பகுதி அதிக வெப்பத்தன்மையுடன் இருக்கும் என சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு கீழ் பகுதி மாத்திரமே அந்தாட்டிக்கா கடலுடன் இணைந்துள்ளமையினால் கீழ் பகுதி சற்று குளிர்மையாக இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஏனைய கடல் பரப்புக்களை விடவும், இந்து சமுத்திரத்தின் வெப்பமாகும் தன்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கடலில் அதிக வெப்பம் காணப்படுகின்றமையினால் மீன்களின் இனப் பெருக்கம் குறைவடையும் என்பதுடன், பவள பாறைகளும் சேதமாகும் என அவர் கூறுகின்றார்.
மேலும், மீன்கள் உற்பத்தியாகும் பகுதிகள் எல்லாம் இதனால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், கடலில் அதிக வெப்பம் ஏற்படுகின்றமையினால். மீன்கள் குளிர்மையான கடல் பரப்பை நோக்கி இடப்பெயர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான காரணங்களினாலும் மீன் வளங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளது என கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.
காலநிலை மாற்றமானது, மீன் வளங்களின் இனப் பெருக்கத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
மீன்கள் குறைய எல்-நினோ காலநிலை காரணமாக?

எல்-நினோ காலநிலை மாற்றமானது, கடந்த ஜுன் மாத காலப் பகுதியில் ஆரம்பமானமையினால், மீன்கள் குறைவடைய அது பெருமளவு தாக்கத்தை செலுத்தவில்லை என இலங்கை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.
எல்-நினோவின் தாக்கம் கடலில் இதுவரை தென்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
”கடந்த ஒரு தசாப்தமாகவே மீன்வளம் படிப்படியாக குறைவடைந்துக் கொண்டு வருகின்றது. எல்-நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இருக்கலாம். எல்-நினோ தொடங்கி இரண்டு மாதங்கள் தான். அதன் தாக்கம் எவ்வாறு இருக்க போகின்றது என்பது தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மீன் வளங்களின் குறைவானது, இன்றைக்கு நேற்று ஏற்பட்டது அல்ல. இது கடந்த ஒரு தசாப்தமாகவே இருந்து வருகின்றது.” என அவர் கூறுகின்றார்.
இந்திய மீனவர்களின் பிரவேசமும் மீன்கள் குறைய காரணமா?

இலங்கையின் வடப் பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையும், மீன்வளம் குறைவடைய காரணமாக அமைந்துள்ளது என நாரா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.
இந்திய மீனவர்கள் ட்ரோலிங் முறையில் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடுகின்றமையினால், கடலில் கீழ் பகுதியை வாரி எடுத்துக்கொண்டு சென்று விடுகின்றது என அவர் கூறுகின்றார்.
இதனால், மீன் உற்பத்திக்கு வழிவகுகின்ற பவள பாறைகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சேதமடைகின்றமையினால், மீன்களின் இனப் பெருக்கும் வெகுவாக குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையானது, இலங்கைக்கு மாத்திரமன்றி, இந்தியாவிற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
”இந்தியா இந்த விடயம் தொடர்பில் பெரியதாக கவலைப்பட போவதில்லை. காரணம், அவர்கள் கடலை விடவும், வளர்ப்பு முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் இன்னுமொரு துரதிஷ்டமான விடயமொன்று இருக்கின்றது. இலங்கையில் ட்ரோலிங் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா அதனை செய்கின்றது. இந்த மீன்பிடி முறையில் மிக மிக சிறிய மீன்கள் பிடிப்படும். அதை இந்தியாவிற்கு கொண்டு சென்று, மீன்களுக்கான உணவு வகைகளை செய்வதற்கு பயன்படுத்துகின்றார்கள். மனித உணவுக்காக அவற்றை பயன்படுத்த மாட்டார்கள். அதிலுள்ள துரதிஷ்டம் என்னவென்றால், அதே மீன்களுக்கான உணவு வகைகளை இலங்கை இறக்குமதி செய்யும். அது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மீன்பிடித்துறையில் தங்க வாழ்கின்ற வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இதுவொரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் வடப் பகுதி ஒரு காலத்தில் அதிகளவிலான மீன்வளத்தை கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டி அவர், ஆனால் தற்போது இலங்கையின் ஏனைய பகுதிகளை விடவும் வடப் பகுதியில் மீன்வளங்கள் மிக வேகமாக குறைவடைந்து வருகின்றது எனவும் கூறினார்.
இலங்கையின் மீன் வளத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

இலங்கையின் மீன்வளத்தை அதிகரிக்கும் யோசனைகளையும் நாரா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.அருளானந்தம் முன்வைக்கின்றார்.
குறிப்பாக கடல் மீன்வளத்தை விடுத்து, வளர்ப்பு மீன் வளத்தை நோக்கி இலங்கை வேகமாக நகர வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
உலகிலுள்ள ஏனைய நாடுகள் வளர்ப்பு மீன்களை நோக்கி தமது நகர்வை ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கை அந்த இடத்தை நோக்கி முழுமையாக இன்னும் நகரவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கை தொடர்ச்சியாக கடல் மீன்வளத்தை நம்பியிருக்குமேயானால், இலங்கையை சூழவுள்ள கடலில் மீன்வளங்கள் வெகு விரைவில் குறைவடைந்து மீன் வளத்திற்கான தட்டுப்பாடு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
”ஒரு காலத்தில் நாங்கள் நாட்டு கோழி இறைச்சியை சாப்பிட்டோம். நாட்டு கோழிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது. அதனால், மாதத்திற்கு ஒரு தடவையே கோழி இறைச்சியை முன்பு சாப்பிட்டோம். இப்போது வளர்ப்பு கோழிகளை சாப்பிடுகின்றோம். இப்போது நினைக்கும் போதெல்லாம் கோழி இறைச்சியை சாப்பிட முடியும். அதே போன்று தான் மீன்களையும் வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் என்ன சொல்கின்றது?
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக பொறுப்பு நாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
தமது அறிவிப்புக்கு அமைய, நாரா நிறுவனம் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.