நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜன், அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலையாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனோஜனின் குடும்ப உறுப்பினர்களை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அமைச்சுக்கு அழைத்து, இந்த விடயத்தை அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்தநாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி ரத்து செய்திருந்த நிலையில், ஏனைய குற்றச்சாட்டுக்களிலும் இருந்து அவர் கடந்த 9ம் தேதி விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், அனோஜன் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றவுடனேயே, அவர் சிறையிலிருந்து வெளியேறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் சில தினங்களில் அனோஜனை நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் குடும்பம்

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவரது குடும்பத்தினர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அனோஜனின் குடும்பத்தாருடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.
அனோஜனின் விடுதலைக்கான சௌதி அரேபிய அரசாங்கம் உதவி செய்தமைக்கும், இதற்கான தலையீடு செய்ய அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனை வழங்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனுக்கு, மரண தண்டனை விதித்த சவுதி நீதிமன்றம்