மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்று, தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், மலைப்பகுதியில் உள்ள தர்காவின் வழிபாட்டு உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால், வழக்கமான நடைமுறையின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து இந்த பிரச்சனையானது நீதிமன்றம் வரை சென்றது.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற அனுமதியை வழங்கினார். இதையடுத்து இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் சென்ற போது, நவம்பர் 20 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் கொண்ட குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இந்த ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது. மேலும், கோயில் செயல் அலுவலர், இந்தியத் தொல்லியல் துறை (ASI), மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல், மீறியதாகக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்:
உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது இன்று, நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் கோயில் அறங்காவலர் குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை வழங்காததால் நிகழ்வை நடத்த முடியவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், உத்தரவைச் செயல்படுத்த முடியாததற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரியிருந்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியரின் இந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. மாவட்ட ஆட்சியர் ஒரு நிர்வாக நடுவர் அதிகாரத்தையும் கொண்டிருப்பவர். அவருக்கு உத்தரவைச் செயல்படுத்த போதுமான அதிகாரங்கள் இருக்கும்போது, இத்தகைய விளக்கத்தை அளிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாவட்ட ஆட்சியரின் அறிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘நீங்கள் இறந்தவர் போல நடித்தால், நாங்கள் அழுவது போல நடிக்கிறோம்’ என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியரின் அறிக்கை முதலைக் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்று கடுமையாக விமர்சித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறுவது போன்ற செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றும், இதுபோன்ற சூழல்களில் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இத்தகைய செயல்கள் தொடர்ந்தால் அரசியலமைப்பு அமைப்பில் குழப்பம் ஏற்படக்கூடும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும்:
இந்த வழக்கில் பக்தர்களுக்கு மிக முக்கியமான உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் ஏற்றப்பட்டுள்ள தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்று, மறுநாள் அதாவது நவம்பர் 28ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீபத்தூணில் பக்தர்கள் ஒவ்வொருவரும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. தர்காவின் பாதுகாப்பு மற்றும் அங்கு வழிபடுபவர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் உள்ளூர் காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் (CRPF) ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? இந்த முடிவை யார் எடுத்தது? அரசியல் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் யாராவது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்களா? என்பது தொடர்பான விவரங்களை நீதிமன்றம் கேட்டது. இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான முழுமையான முடிவெடுக்கும் நடைமுறையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.