அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்: சாதனை படைத்த ரூர்க்கேலா விஞ்ஞானிகள்!

கழிவாகக் கருதப்படும் பொருட்களிலிருந்தும் விவசாயத்திற்குத் தேவையான வளங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்க்கேலா தேசிய தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள். மனித சிறுநீரில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பிரித்தெடுத்து, பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் உரமாக மாற்றும் புதிய முறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித சிறுநீரில் உள்ள பாஸ்பரஸை 98 சதவீதத்திற்கும் அதிகமாக மீட்டெடுக்க முடிந்துள்ளது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் ஊட்டச்சத்துகளைக் கொண்டு, தாவரங்களுக்குத் தேவையான சத்துகளைப் படிப்படியாக வழங்கும் ‘ஸ்ட்ரூவைட்’ என்ற உரத்தைத் தயாரிக்க முடியும். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை நீர் செயலாக்கப் பொறியியல் தொடர்பான சர்வதேச ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

விவசாயத்திற்கு உதவும் மனிதக் கழிவுகள்!

பயிர்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துகளும் மிகவும் அவசியமானவை. இவை அடங்கிய உரங்கள் விவசாயத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்தகைய உரங்களைத் தொழிற்சாலைகளில் தயாரிப்பதற்கு அதிக அளவில் ஆற்றலும் மூலப்பொருட்களும் தேவைப்படுகின்றன. இதனால் உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது.

இதற்கு மாற்றாக, கழிவுப் பொருட்களில் உள்ள பயனுள்ள ஊட்டச்சத்துகளை மீட்டெடுத்து மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மனித சிறுநீரில் இயற்கையாகவே காணப்படும் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கும் வழிமுறையை ரூர்க்கேலா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாகச் சிறுநீரில் இருந்து ஊட்டச்சத்துகளைப் பிரித்தெடுக்க ரசாயனப் படிவு முறை பயன்படுத்தப்பட்டது. இந்த முறையில் தேவையான பொருட்களைத் தனியாகப் பிரிப்பதற்கு கூடுதல் ரசாயனங்களையும் மெக்னீசியம் உப்புகளையும் சேர்க்க வேண்டியிருந்தது. இதனால் செலவும் ரசாயனப் பயன்பாடும் அதிகரித்தன.

மின்சாரத்தின் மூலம் உரம் தயாரிக்கும் புதிய முறை!

இந்தச் சிக்கலைக் குறைப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையில் மெக்னீசியத்தால் செய்யப்பட்ட மின்முனைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வழியாக மின்சாரம் செலுத்தப்படும்போது, மின்முனைகள் படிப்படியாகக் கரைந்து மெக்னீசியம் அயனிகளை வெளியிடுகின்றன.

இந்த அயனிகள் சிறுநீரில் உள்ள பாஸ்பேட் மற்றும் அம்மோனியம் சேர்மங்களுடன் இணைந்து ‘ஸ்ட்ரூவைட்’ என்ற தாதுப் படிவத்தை உருவாக்குகின்றன. பின்னர், இந்தப் படிவத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து விவசாய உரமாகப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக, இந்த உரத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் ஒரே நேரத்தில் வெளியேறாமல் படிப்படியாகத் தாவரங்களுக்குக் கிடைக்கும் தன்மை கொண்டவை. இதனால் பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளை வழங்குவதற்கான மாற்று வழியாக இது அமைகிறது.

மின்முனைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கும் வழிமுறை!

இந்தப் புதிய முறையைச் செயல்படுத்தும்போது மின்முனைகளின் மேற்பரப்பில் கழிவுப் படிவங்கள் சேர்வது முக்கியச் சவாலாக இருந்தது. இத்தகைய படிவங்கள் அதிகரிக்கும்போது மின்சாரம் சீராகப் பாய்வதில் தடை ஏற்பட்டு, உரம் உருவாகும் செயல்முறையின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.

இதனைச் சரிசெய்ய ஆராய்ச்சியாளர்கள் எதிர்மறை மின்திசை மாற்று முறையைப் பயன்படுத்தினர். அதாவது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மின்சாரம் பாயும் திசையை மாற்றுவதன் மூலம் மின்முனைகளில் படிந்துள்ள கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதனால் மெக்னீசியம் சீராகக் கரைந்து, உரம் தயாரிக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெறுகிறது.

98 சதவீதத்திற்கும் அதிகமான பாஸ்பரஸ் மீட்பு!

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறனைச் சோதிப்பதற்காக 5 லிட்டர் மற்றும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பரிசோதனை உலைகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். ஆண்கள் சிறுநீர் கழிக்கும் அறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீரைக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட உலையில் 98.01 சதவீத பாஸ்பரஸும், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட உலையில் 91.94 சதவீத பாஸ்பரஸும் மீட்டெடுக்கப்பட்டன.

மேலும், மீட்கப்பட்ட பொருள் தூய்மையான ஸ்ட்ரூவைட் தாதுதான் என்பதை உறுதிப்படுத்த எக்ஸ்-கதிர் படிகவியல் ஆய்வு மற்றும் அகச்சிவப்புக் கதிர் நிறமாலை ஆய்வு ஆகிய இரண்டு நவீன சோதனை முறைகளும் பயன்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட உரத்தின் செயல்திறனை அறிய துளசி, காராமணி மற்றும் வெண்டை ஆகிய பயிர்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வணிக ரீதியாகக் கிடைக்கும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து அடங்கிய உரங்களுடன் ஒப்பிடக்கூடிய தாவர வளர்ச்சி முடிவுகள் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

500 லிட்டர் அளவில் பொருளாதார ரீதியாகச் சாத்தியம்!

இந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்துவதற்கான பொருளாதாரச் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர்.

இதில் 35 லிட்டர் உலையில் இருந்து ஸ்ட்ரூவைட் உரத்தை மட்டும் தயாரிப்பது அதிக செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக லாபகரமானதாக இல்லை என்பது தெரியவந்தது. இதற்குத் தீர்வாக, சிறுநீரில் இருந்து அம்மோனியம் சல்பேட் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துகளையும் மீட்டெடுக்கும் முறையை இணைக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர்.

இதன்படி, 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட முன்னோடி அளவிலான அமைப்பில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மீட்பு முறையின் பொருளாதாரச் சாத்தியக்கூறுகள் மதிப்பிடப்பட்டன. இதில் முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான காலம் 6.55 ஆண்டுகளாகவும், உள்நாட்டு வருவாய் விகிதம் 13 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே வகையான உரத்தை மட்டும் தயாரிப்பதைவிட, பல்வேறு ஊட்டச்சத்துகளை ஒருங்கிணைத்து மீட்டெடுப்பது பொருளாதார ரீதியில் சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்!

இந்த ஆராய்ச்சியில் ரூர்க்கேலா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பி. பாலசுப்ரமணியன், இணைப் பேராசிரியர் ஜே. சிவராமன், உதவிப் பேராசிரியர் பிகாஷ் சந்திர மகாராஜ் மற்றும் ஆராய்ச்சி மாணவி அலிஷா ஜாஃபர் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து இயங்கக்கூடிய மின்வேதியியல் அமைப்புகளை உருவாக்குதல், தயாரிக்கப்பட்ட உரத்தை விவசாய நிலங்களில் பயன்படுத்திச் சோதனை செய்தல், பசுமை ஹைட்ரஜனை மீட்டெடுப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை அவர்களின் எதிர்காலத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தத் தொழில்நுட்பத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களையும் விரிவாக மதிப்பிட ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை கழிவாக வெளியேற்றப்பட்ட மனித சிறுநீரை விவசாயத்திற்குப் பயன்படும் வளமாக மாற்றும் இந்த முயற்சி, உர உற்பத்திக்கான மாற்று வழியை உருவாக்குவதோடு, கழிவு மேலாண்மை மற்றும் நிலையான விவசாய வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Sneha Venkatachalam

Sneha Venkatachalam